நீலகிரி மாவட்டம் கூடலூரில் மக்களை அச்சுறுத்தி வரும் டி23 புலியை சுட்டுக்கொல்ல அனுமதி வழங்கப்பட்டுள்ள நிலையில், ஒரு புலி எப்போது ஆட்கொல்லியாக மாறுகிறது என்பதை பார்க்கலாம்.
வனத்தில் ஒரே ஒருமுறை புலியை நாம் பார்ப்பதற்கு முன், நூறுமுறையாவது அந்த புலி நம்மை பார்த்திருக்கும் என்பதுதான் காட்டுயிர் ஆர்வலர்களின் கூற்று. அந்தளவிற்கு மனிதர்களை கண்டால் அஞ்சி ஓடும் குணம் கொண்டதுதான் புலிகள். கூச்ச சுபாவம் கொண்ட புலிகள் மனிதர்களை பார்க்கும் எல்லா நேரமும் தாக்கிவிடுவது இல்லை. உயிருக்கு அச்சுறுத்தல் வரும்போது தற்காப்பிற்காக மட்டுமே பெரும்பாலும் புலிகள் தாக்கும்.
அதேசமயம் மனிதர்களை கொல்லும் எல்லா புலிகளும் ஆட்கொல்லியாக அதாவது மேன் ஈட்டராக மாறுவதில்லை. வயோதிகம், காயம் காரணமாக வேட்டையாட திறனற்று இருக்கும் போது, மனிதர்களின் ரத்தத்தை சுவைக்க தொடங்கும் புலியே மேன் ஈட்டராக மாறுகின்றன என குறிப்பிட்டுள்ளார் காட்டுயிரிகள் ஆய்வாளரான ஜிம் கார்பெட்.
தமிழகத்தில் கூட 2014, 2015, 2016ல் ஆட்கொல்லியாக அடையாளம் காணப்பட்ட 3 புலிகள் சுட்டுக் கொல்லப்பட்டுள்ளன. மகாராஷ்டிராவில் ஆவ்னி என்ற பெண் புலி இந்தியாவின் மேன் ஈட்டரில் மிகவும் பிரபலமானது. அதே சமயம், 1997ஆம் ஆண்டு வால்பாறையில் ஆட்கொல்லியாக சுற்றி வந்த புலி உயிருடன் பிடிக்கப்பட்டு வன உயிரியல் பூங்காவில் பராமரிக்கப்பட்டது. தற்போது கூடலூரில் சுற்றி வரும் டி23 புலி இதற்கு முன் கொன்றவர்களை உணவாக உட்கொண்டதில்லை.
ஆனால், தற்போது, 4ஆவது நபரை கொன்று உண்டுள்ளதாக கூறப்படுகிறது. புலியின் ஆயுட்காலமே 15ஆண்டுகள் என்கிறபோது தற்போது டி23யின் வயதோ 13. எல்லை பிரச்னையில் உடலில் காயங்களோடு சுற்றிவரும் இந்த புலி ஆட்கொல்லியாக மாறுவதற்கான வாய்ப்புகள் அதிகம் உள்ளன. அப்படி மாறினாலும், பாதுகாப்பாக பிடித்து உயிரியல் பூங்காவில் பராமரிப்பதற்கான சாத்தியக்கூறுகளும் உள்ளன என்பதற்கு முந்தைய உதாரணங்களும் உண்டு. அதற்கேற்ற வகையில் வனத்துறையினர் நடவடிக்கை மேற்கொண்டு வருகின்றனர்.