இருவாச்சி மனிதர் பைஜூ ! ஒரு வேட்டைக்காரன் வனக்காதலன் ஆன கதை !

இருவாச்சி மனிதர் பைஜூ ! ஒரு வேட்டைக்காரன் வனக்காதலன் ஆன கதை !
இருவாச்சி மனிதர் பைஜூ ! ஒரு வேட்டைக்காரன் வனக்காதலன் ஆன கதை !
Published on

ஒரு வேட்டைக்காரன் எப்படி வனக் காதலனாக மாற முடியும் ? இப்படியான ஒரு மனிதர் நம்மிடைய வாழ்ந்திருந்தாரா ? என்ற கேள்வி இந்தக் கட்டுரையை படிக்கும் பலருக்கும் இருக்கும். ஆனால் உண்மை அதுதான். அப்படிப்பட்ட ஒரு எளிய மனிதரை பற்றி ஒரு நெகிழ்ச்சியான கட்டுரையை தன்னுடைய ஃபேஸ்புக் பக்கத்தில் பதிவிட்டிருக்கிறார் காட்டுயிர் ஆர்வலரும் செயற்பாட்டாளுருமான ராமமூர்த்தி.

இதோ அவருடைய பதிவு" கடந்த நான்கு நாட்களாக கானுயிர் ஆர்வலர்கள் மற்றும் கானுயிர் புகைப்படக்காரர்களிடையே ஒரு பெரிய அதிர்ச்சியையும் வருத்தத்தையும் ஏற்படுத்தியிருக்கிறது என்றால் அது, அனைவராலும் "பைஜு" என அழைக்கப்படும் பைஜு கே. வாசுதேவன் அவர்களின், எதிர்பாராத மரணம்தான். தமது குழந்தைப் பருவம் முதற்கொண்டு வனத்திலேயே பைஜு இருக்க காரணம், பிறந்ததே அதிரப்பள்ளி காடுகளின் உள்ளடங்கிய வளச்சல் பகுதியில்தான். இயல்பாகவே இவரின் உடல் முழுவதும் காடு நிரம்பியிருந்தது. அதனால் காட்டின் மொழிகள் அனைத்துமே இவருக்கு அத்துப்படி. ஒவ்வொரு பறவைகளையும் தமது குரல் மூலம் ஈர்க்கின்ற இயல்பைக் கொண்டவர். அழைத்தால் அவைகளும் இவரை நோக்கித் திரும்பும். இது போன்ற வாழ்வும் திறனும் அனைவருக்கும் வாய்க்காது.

வளச்சல் பகுதிகளில் வாழ்கிற "காடர்" என அழைக்கப்படும் ஆதிகுடி மக்களின் வாழ்வியல் இவரோடு இயல்பாய் சேர்ந்துவிட்டது. அப்போதைய காலக் கட்டத்தில் பைஜுவிற்கு வன விலங்குகளை வேட்டையாடுவது என்பது மிகப் பிடித்தமான ஒன்று. அப்படியே சட்ட விரோதமான கள்ளச் சாராயம் உற்பத்தி செய்து விற்கிற தொழிலும் கூடவே ஒட்டிக்கொண்டது. இப்படியாகத்தான் இவரது துவக்க கால வாழ்க்கை இருந்திருக்கிறது.

ஒரு வேட்டையாடியை வனக்காதலனாகவும் காட்டைக் காக்கும் அக்கறையுடையவனாகவும் இவரைமாற்றியது என்பது, காட்டின்மீதும் இந்த பூமியின் மீதும் கரிசனமும் அளவற்ற அக்கறையுடனுமிருந்த ஒரு வனத்துறை அதிகாரியை 1988 ஆண்டில் சந்தித்தபின்தான். அந்த வனத்துறை அதிகாரி இந்து சூதன் எனும் பெருமைக்கு உரியவர். அவர் மூலமாகத்தான் நம்ம பைஜு கானகமும், கானுயிர்களும் இந்தப் புவிச்சூழலுக்கு எவ்வாறு உதவுகிறது. அவற்றை எப்படியெல்லாம் பாதுகாக்கப்பட வேண்டும் என்பது பற்றியெல்லாம் அறிந்துகொண்டார்.

கண்ணூரை பூர்வீகமாக கொண்ட பைஜு பிறந்தது, முதல் மூச்சை இழுத்து நுரையீரல் முழுவதும் நிரம்பியது, அதிரப்பள்ளி காடுகள் கொடுத்த காற்றைத்தான். இப்படியான ஒரு காட்டின் குழந்தைக்கு அந்த அதிகாரி சொன்ன தகவல்கள் பலமடங்குகளாக புரிதலை உண்டாக்கியது. அதன்பின்னர்தான் காடுகளுக்காகவே தனது வாழ்வை மாற்றிவிட்டார். கேரளத்தின் சிறப்பான கானுயிர் புகைப்பட கலைஞராகவும் தம்மை வளர்த்துக் கொண்டதோடு. இதுவரை பல்லாயிரக்கணக்கான மனிதர்களிடையே காடுகள்பற்றி எடுத்துச் சொல்லி மாற்றத்தை விதைத்துக் கொண்டிருந்தார்.

கேரள அரசின் வனக்கல்லூரி (Kerala Agricultural University's College of Forestry)யில், நம்ம பைஜுவை கௌரவ விரிவுரையாளராக வைத்திருக்கிறார்கள். வால்பாறை ரோட்டில் சாலைவிபத்தில் இறந்துகிடந்த ஒரு ஆண் இருவாச்சிப் பறவையின் இணையையும், அதன் குஞ்சுகளையும் காப்பாற்றிய பெருமை, இவரையும் பறவை ஆர்வலர் சதீசையும், சமூக வலைதளங்கள் உலகமெங்கும் கொண்டு சேர்த்தது. இறந்துவிட்ட அந்த ஆண்பறவைக்குப் பதிலாக குஞ்சுகளும் தாயிற்கும் கூட்டிலிருந்து வெளிவரும்வரை, உணவூட்டி காத்த காணொளி மிகப் புகழ்பெற்றது. இருவாச்சிகளின் வாழ்வியலை அறிந்தவர்களால்தான் இந்தச் செயலின் முக்கியத்துவத்தை உணர முடியும். 

அதிரப்பள்ளி வனங்களில் ஒரு சிறந்த வழிகாட்டியாக வாழ்ந்த பைஜு, அப்பகுதி வனவாசிகளின் முன்னேற்றத்திற்காகவும். இயற்கையை யாரும் சிதைக்காமல் இருக்கவும் பெரும் செயல்களையும் முயற்சிகளையும் செய்துவந்ததை அறிய அறிய, மனதின் மிக உயரமான இடத்திற்கு சென்று கொண்டே இருக்கிறார். இவரது இறப்பு கேரள காடுகளுக்கு மட்டுமான இழப்பில்லை. இவரைப் போன்ற செயல்களை செய்து கொண்டிருப்பவர்களை உலகம் முழுவதுமுள்ள, ஒட்டு மொத்த மக்களோடு ஒப்பிடும்போது ஒற்றை இலக்க சதவிகிதத்தில்தான் இருக்கிறார்கள். அந்த வகையில் இவரது இழப்பு என்பது உலகிற்கே பெரிய இழப்பு.

இந்த உலகில் இறுதியாக, மனிதர்கள் விட்டுச் சொல்லக்கூடிய உண்மையான சொத்து எது என உணர்ந்த ஒருசிலரில் இவரும் ஒருவர். அந்த எண்ணிக்கை மேலும் குறைந்ததில் பெரும் வருத்தமே எஞ்சி நிற்கிறது.

- காட்டுயிர் ஆர்வலர், ராமமூர்த்தி

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com