தென்காசி சாலை ஓரங்களில் கொட்டப்படும் மருத்துவக் கழிவுகளால் சுகாதாரக்கேடு ஏற்படும் அபாயம் ஏற்பட்டுள்ளது.
தென்காசி மாவட்டத்தில் தென்காசி - ஆய்க்குடி செல்லும் சாலை ஓரங்களில் பல இடங்களில் மருத்துவ கழிவுகள் மூட்டை மூட்டையாக கொட்டப்பட்டுள்ளன. இதில், சில மூட்டைகள் எரிக்கப்பட்டும் சில மூட்டைகள் எரிக்கப்படாமலும் சுகாதாரக்கேடு உருவாகும் வகையில் உள்ளன.
ஆய்க்குடி செல்லும் சாலையில் அடிக்கடி பாதசாரிகள் நடந்து செல்லும் சாலை ஓரத்தில் பயன்படுத்தப்பட்ட சிரஞ்சுகள், ஊசிகள், ஐவி செட்கள், காலாவதியான மற்றும் பயன்படுத்தப்பட்ட மருத்துவ கழிவுகள் கொட்டப்பட்டுள்ளன.
தொடர்ந்து இந்த பகுதியில் இது போன்ற மருத்துவ கழிவுகள் கொட்டப்பட்டு வந்த நிலையில், தற்போது இது அதிகரித்துள்ளது. பெருந்தொற்று அச்சம் உள்ள இந்த காலத்தில் பயன்படுத்தப்பட்ட மருத்துவ கழிவுகளை முறையாக அகற்றாமல் இது போன்ற இடங்களில் சுகாதாரக் கேடு ஏற்படும் விதத்தில் கொட்டுவோர் மீது கடுமையான நடவடிக்கை எடுத்து மாவட்ட நிர்வாகம் சுகாதாரக்கேட்டை தடுத்து நிறுத்த வேண்டும் என சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்