காற்று மற்றும் சூரிய மின் ஆற்றல் திறனில் தமிழகம் மூன்று ஆண்டுகளுக்கு பின் முதலிடத்தை பிடித்துள்ளது.
அனல் மின் நிலையங்கள் மூலம் உற்பத்தி செய்யப்படும் மின்சாரங்களுக்கு மாற்றாக, சூரிய ஒளி மற்றும் காற்றாலை மூலம் மாற்று எரிசக்தி மின் உற்பத்தியை பெருக்கும் நடவடிக்கையில் தமிழகம் தீவிரமாக ஈடுபட்டு வருகிறது.
அந்த வகையில் கடந்த ஜனவரி மாத இறுதியுடன் தமிழகத்தின் மொத்த மாற்று எரிசக்தி திறன் 15 ஆயிரத்து 914 மெகா வாட்டாக உயர்ந்துள்ளது. இதன் மூலம் 15 ஆயிரத்து 795 மெகா வாட் உற்பத்தி திறன் கொண்ட கர்நாடகாவை முந்தி, தமிழகம் முதலிடத்தை பிடித்துள்ளது. கடந்த 2018 ஆம் ஆண்டு மாற்று எரிசக்தி திறனில் தமிழகம் தான் முதலிடத்தில் இருந்தது. ஆனால், காற்றாலை மற்றும் சூரிய மின் சக்தி திறனை கர்நாடகா விரைவாக பெருக்கி தமிழகத்தை பின்னுக்குத் தள்ளியது.
2019 ஜனவரியில் கர்நாடகாவின் மொத்த மாற்று எரிசக்தி திறன் 13 ஆயிரத்து 402 மெகா வாட்டாக இருந்தது. அப்போது தமிழகத்தில் 12 ஆயிரத்து 125 மெகா வாட் உற்பத்தி மட்டுமே பெருக்கப்பட்டிருந்தது. இதைத் தொடர்ந்து மாற்று எரிசக்தி திறனை அதிகரிக்கும் நடவடிக்கையில் தமிழகம் கவனம் செலுத்தியதால், மீண்டும் முதலிடத்திற்கு வந்துள்ளது.