T23 புலி கூடலூர் நோக்கி வந்த நிலையில், போஸ்பெரா பகுதி மக்களுக்கு ஒலி பெருக்கி மூலம் எச்சரிக்கை விடுக்கப்பட்டு வருகிறது.
கடந்த 11 நாட்களாக மசினகுடி மற்றும் சிங்காரா வனப்பகுதியில் பதுங்கி இருந்த T23 புலி இன்று அதிகாலை மீண்டும் முதுமலை புலிகள் காப்பகத்துக்கு உட்பட்ட ஒம்பெட்டா வனப்பகுதிகள் வந்தது உறுதி செய்யப்பட்டது. அங்கு பொருத்தப் பட்டிருந்த தானியங்கி கேமராவில் அதிகாலை 3 மணிக்கு புலியின் உருவம் பதிவாகி இருக்கிறது.
இதன் மூலம் புலி போஸ்பெரா, தேவன் எஸ்டேட், மேல்பீல்டு பகுதியை நோக்கி திரும்பவது தெரியவந்திருக்கிறது. இதனையடுத்து ஸ்ரீமதுரை ஊராட்சியின் மூலம் போஸ்பெரா பகுதி மக்களுக்கு புலி நடமாட்டம் குறித்து ஒலிபெருக்கி மூலம் எச்சரிக்கை விடுக்கப்பட்டு வருகிறது. வனத்தை ஒட்டிய பகுதிகளில் மாடு மேய்க்க செல்ல வேண்டாம் என கேட்டுக் கொள்ளபட்டிருக்கிறது.
அதேபோல், முதுமலை வனப் பகுதிக்கு உட்பட்ட முதுகுளி, நாகம்பள்ளி கிராம மக்களும் எச்சரிக்கையாக இருக்க அறிவுறுத்தப்பட்டிருக்கிறது. தற்சமயம் புலி இருக்கும் இடத்தை கண்டறிய மசினகுடியிலிருந்து வனத்துறை குழு கூடலூர் நோக்கி விரைந்திருக்கிறது.