மதுரையில் இரவு முழுவதும் பெய்த கன மழையால் செல்லூர் கண்மாயில் இருந்து வெளியேறும் நீரில் 15 அடி உயரத்திற்கு நுரை பொங்கி காட்சியளிக்கிறது இதனால் பொதுமக்கள் அச்சமடைந்துள்ளனர்.
மதுரை மாநகர் மற்றும் மாவட்டத்தில் இரவு முழுவதும் பெய்த மழை காரணமாக மதுரை செல்லூர் கண்மாய்க்கு, குலமங்கலம், ஆலங்குளம், பனங்காடி, கோசாகுளம், ஆகிய குளங்களில் இருந்து நீர்வரத் தொடங்கியது.
இந்நிலையில் நீர்வரத்து கால்வாய்களில் கழிவுநீர் நேரடியாக கலப்பதால் வெளியேறும் தண்ணீரில் 15அடி முதல் 20அடி உயரம் வரை நுரை பொங்கி சாலையில் பறந்து சென்றது. இதனால் சாலையில் சென்ற இருசக்கர மற்றும் நான்கு சக்கர வாகன ஓட்டிகள் மிகுந்த சிரமத்திற்கு உள்ளாகினர்.
இதனையடுத்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த தீயணைப்புத் துறை மற்றும் காவல்துறையினர் கண்மாயில் இருந்து வெளியேறும் நீரில் இருந்து ஒதுங்கிய நுரையை அகற்றியதோடு, அந்தப்பகுதியில் நுரையைக் காண கூடிய மக்களையும் கலைந்து போகச்செய்தனர்
250 ஏக்கர் பரப்பளவு கொண்ட செல்லூர் கண்மாய், ஆக்கிரமிப்பாலும் கட்டிட கழிவுகள் கொட்டப்படுவதாலும் பொதுப்பணித் துறையின் அலட்சியத்தாலும் கண்மாயின் பரப்பளவு 150 ஏக்கருக்கும் கீழ் குறைந்துள்ளது. இதனால் கண்மாயில் தேங்கும் மழைநீருடன் கழிவுநீர் நேரடியாக கலப்பதால் அப்பகுதியில் உள்ள ஆயிரக்கணக்கான குடியிருப்புகளில் நிலத்தடி நீர் மாசடைந்துள்ளது.
இதனால் நோய் பரவும் அபாயம் ஏற்பட்டுள்ளதாகவும் கண்மாயில் ஆகாயத்தாமரை அதிகளவு வளர்ந்துள்ளதாகவும் அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
<iframe width="560" height="315" src="https://www.youtube.com/embed/VOI5rePRwcc" frameborder="0" allow="accelerometer; autoplay; clipboard-write; encrypted-media; gyroscope; picture-in-picture" allowfullscreen></iframe>