சேலம்: நிலத்தடி நீர்மட்டம் உயர்த்தும் பணியை மீண்டும் தொடங்க மக்கள் கோரிக்கை

சேலம்: நிலத்தடி நீர்மட்டம் உயர்த்தும் பணியை மீண்டும் தொடங்க மக்கள் கோரிக்கை
சேலம்: நிலத்தடி நீர்மட்டம் உயர்த்தும் பணியை மீண்டும் தொடங்க மக்கள் கோரிக்கை
Published on

ஓமலூர், தாரமங்கலம், காடையாம்பட்டி ஒன்றியங்களில் மழைநீரை சேமித்துவைத்து, நிலத்தடி நீர் மட்டத்தை உயர்த்த மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டுமென அப்பகுதி மக்கள் சார்பில் மாவட்ட நிர்வாகத்துக்கு கோரிக்கை வைக்கப்பட்டுள்ளது.முன்னரே இதற்கான பணிகளை மாவட்ட நிர்வாகம் தொடங்கியிருக்கிறதென்றும், அவையாவும் பாதி நிலையிலேயே கண்டுக்கொள்ளாமல் விடப்பட்டுவிட்டது என்றும் கூறும் அம்மக்கள், அப்பணிகளை மாவட்ட நிர்வாகம் மீண்டும் கையில் எடுக்க வேண்டுமென கோரிக்கை வைக்கின்றனர்.

மக்களின் கோரிக்கையை தொடர்ந்து, பயன்படாத போர்வெல்களில் மழை நீரை சேமித்தல் உள்ளிட்ட நிலத்தடி நீர் அதிகரிப்புக்கான பணிகளை ஒன்றிய நிர்வாகத்தின் மூலம் தீவிரபடுத்த சேலம் மாவட்ட ஆட்சியர் கார்மேகம் ஆலோசனை வழங்கியுள்ளார்.

சேலம் மாவட்டம் ஓமலூர், காடையாம்பட்டி, தாரமங்கலம் ஆகிய ஒன்றியங்களில் தற்போது பருவமழை பெய்து வருகிறது. ஆனால், வழக்கமான மழை பொழிவு இல்லாமல் இவ்வருடம் குறைவாகவே அப்பகுதியில் மழை பெய்திருக்கிறது. இதனால் அப்பகுதியை சேர்ந்த 67 வருவாய் கிராமங்களில் நிலத்தடி நீர் மட்டம் நிலையாக இல்லை.

ஆகவே நிலத்தடி நீர் மட்டத்தை உயர்த்த மழை நீர் சேகரிப்பு கட்டமைப்புகளின் அவசியம் அப்பகுதியில் உயர்ந்துள்ளது. கடந்த வருடங்களிலும் இதுபோன்ற பிரச்னை இருந்தமையால், அப்போதிருந்தே இக்கோரிக்கை வைக்கப்பட்டு வருகிறது. இருப்பினும் அரசு அதிகாரிகள், இவ்விவகாரத்தில் தொடர் கண்காணிப்பு மற்றும் பராமரிப்பு பணிகளை மேற்கொள்வதில்லை என்ற குற்றச்சாட்டு மக்கள் மத்தியில் நிலவுகிறது.

சேலம் மாவட்ட ஆட்சியராக ரோகிணி இருந்தபோது அப்பகுதியில் மழைநீர் சேமிப்பு கட்டமைப்புகள் ஏற்படுத்தப்பட்டது. அந்தவகையில் கடந்த மூன்று ஆண்டுகளுக்கு முன்பு ஓமலூர் ஒன்றிய நிர்வாகத்தின் கட்டுப்பாட்டிலுள்ள 400 கட்டடங்களில் மழை நீரை சேகரிக்க கட்டமைப்பு வசதிகள் ஏற்படுத்தப்பட்டன. மேலும் கிராமங்களில், பயன்பாடு இல்லாமல் கைவிடப்பட்ட போர்வெல்களில் மழை நீரை சேமிக்க கட்டமைப்பு செய்யப்பட்டது. பத்துக்கும் மேற்பட்ட போர்வெல்களில் சுற்றிலும் தடுப்பு ஏற்படுத்தி, குறிப்பிட்ட ஆழத்திற்கு மணல் கொட்டி மழை நீர் அங்கு செல்ல கான்கிரீட் தளமும் ஏற்படுத்தப்பட்டது. ஆனால், அதன்பிறகு மழைநீர் சேமிப்பை அதிகாரிகள் மறந்துவிட்டனர் என மக்கள் குற்றஞ்சாட்டுகின்றனர். இதனால், அந்த வசதிகள் யாவும் தற்போது பயனில்லாமல் காட்சிப்பொருளாக உள்ளது.

அதிகாரிகளின் அலட்சியம் காரணமாக ஓமலூர், தாரமங்கலம், காடையாம்பட்டி ஆகிய ஒன்றியங்களில் நூற்றுக்கும் அதிகமான போர்வெல் பயனற்று இருப்பது தற்போது கண்டறியப்பட்டுள்ளது. இவை அனைத்தையும் முன்னிறுத்தி, தங்கள் பகுதியில் மழை நீர் சேமிக்கும் பணிகளை மேற்கொள்ள அங்கிருக்கும் மக்கள் வலியுறுத்தினர். மக்கள் மட்டுமன்றி, அப்பகுதி சமூக ஆர்வலர்களும் கிராமங்களில் வீணாக இருக்கும் போர்வெல்களில் உடனடியாக மழை நீர் சேமிப்பு கட்டமைப்புகளை ஏற்படுத்த ஒன்றிய நிர்வாகத்திற்கு கோரிக்கை விடுத்துள்ளனர்.

மக்கள் மற்றும் சமூக ஆர்வலர்களின் கோரிக்கைகளை தொடர்ந்து மழைநீர் சேமிப்பை தீவிரப்படுத்த மாவட்ட ஆட்சியர் கார்மேகம், அனைத்து உள்ளாட்சி அமைப்புகளுக்கும் உத்தரவிட்டுள்ளார். இனியாவது பணிகள் யாவும் துரிதமாக நடக்குமா என அப்பகுதி மக்கள் எதிர்ப்பார்த்து காத்திருக்கின்றனர்.

- தங்கராஜூ

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com