கோவை மேட்டுப்பாளையத்தில் சுற்றிவரும் காட்டுயானை பாகுபலிக்கு ரேடியோ காலர் பொருத்தும் முயற்சி 2 ஆவது நாளாக தொடர்கிறது.
இடம் மாறிக்கொண்டே இருக்கும் யானையை சுற்றி வளைக்க இயலாமல் வனத்துறை திணறிவருகிறது. கோத்தகிரி சாலையை ஒட்டிய வனப்பகுதிக்குள் சுற்றிவரும் பாகுபலி யானைக்கு முதலில் மயக்க ஊசி செலுத்திய பின்னர் கும்கி யானைகளின் உதவியோடு அதன் கழுத்தில் ரேடியோ காலர் பொருத்த வேண்டும் என்பதால் அதன் இருப்பிடத்தை கண்டறிய 42 பேர் கொண்ட 7 தனிக்குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளன.
ஆனால் பாகுபலி யானை வனத்துறையின் பிடியில் சிக்காமல் போக்கு காட்டி வருவதோடு தொடர்ந்து இடம் மாறிக்கொண்டே இருக்கிறது. நேற்று மாலை மேட்டுப்பாளையம்-கோத்தகிரி சாலையை கடந்த பாகுபலி யானை, இன்று காலை சாலையோரம் உள்ள தண்ணீர் தொட்டியில் மீண்டும் நீர் அருந்த வரலாம் என வனத்துறையினரும், அதற்கு மயக்க ஊசி செலுத்த வேண்டிய மருத்துவ குழுவினரும் தயார் நிலையில் இருந்தனர். ஆனால் மீண்டும் யானை மலையடிவாரத்தில் உள்ள அடர்ந்த காட்டுப்பகுதிக்குள் சென்று விட்டது.
சமவெளி பகுதியில் வைத்து யானைக்கு மயக்க ஊசி செலுத்துவது அவசியம் என்பதால் வனத்துறையினர் காத்திருந்தாலும், பாகுபலியின் நடமாட்டத்தையும் அது கடக்கும் பகுதியை கண்டறிவதிலும் சிக்கல் நீடிக்கிறது.