மத்திய பிரதேச மாநிலத்தில் அமைந்துள்ள பென்ச் புலிகள் காப்பகத்தின் ராணி என சொல்லப்பட்டு வந்த ‘காலர்வாலி’ என்ற பெண் புலி உயிரிழந்துள்ளது. 16 வயதான அந்த புலி தனது வாழ்நாளில் மொத்தம் 29 குட்டிகளை ஈன்றது. அதில் 25 குட்டிகள் உயிருடன் தற்போது வாழ்ந்து வருகின்றன. அதனால் பென்ச் புலிகள் காப்பகத்தின் ‘சூப்பர் மம்மி’ எனவும் காலர்வாலி போற்றப்பட்டது.
புலிகள் பாதுகாப்புத் திட்டத்தில் அதன் எண்ணிக்கையை பெருக்க உதவிய புலிகளில் காலர்வாலியின் பங்கும் கொஞ்சம் அதிகம். T15 என்ற பொது பெயரின் கீழ் இந்த புலி அழைக்கப்பட்டு வந்தது. இதன் கழுத்து பகுதியில் இரண்டு முறை ரேடியோ காலர் பொருத்தப்பட்டது. அதன் காரணமாக காலர்வாலி என்ற பெயரை பெற்றது.
வயோதிகம் காரணமாக கடந்த சனிக்கிழமை மாலை காப்புக் காட்டு பகுதியில் காலர்வாலி உயிரிழந்துள்ளது. அதற்கு முந்தைய நாள் சுற்றுலா பயணிகள் அந்த புலியை பார்த்துள்ளனர். அந்த புலியின் மரண செய்தியை கேட்டு வன உயிரின புகைப்படக் கலைஞர்கள் தங்களது இரங்கலை தெரிவித்துள்ளனர்.
மத்திய பிரதே மாநில முதல்வர் சிவராஜ் சிங் சவுகான் இந்த புலி குறித்து தனது ட்விட்டர் பக்கத்தில் பகிர்ந்துள்ளார். அதில் மத்திய பிரதேச காடுகளில் காலர்வாலியின் கர்ஜனை என்றென்றும் அதன் தலைமுறையின் வாயிலாக ஒலித்துக் கொண்டே இருக்கும் என தெரிவித்துள்ளார்.