`கூடங்குள அணுக்கழிவுகளை முறையாக பாதுகாக்காவிடில் கடும் பாதிப்பு’- பூவுலகின் நண்பர்கள்

`கூடங்குள அணுக்கழிவுகளை முறையாக பாதுகாக்காவிடில் கடும் பாதிப்பு’- பூவுலகின் நண்பர்கள்
`கூடங்குள அணுக்கழிவுகளை முறையாக பாதுகாக்காவிடில் கடும் பாதிப்பு’- பூவுலகின் நண்பர்கள்
Published on

கூடங்குளத்தில் அணுக்கழிவுகளை உரிய முறையில் பாதுகாக்காவிடில் கடும் பாதிப்பை ஏற்படுத்தும் என பூவுலகின் நண்பர்கள் அமைப்பு தெரிவித்துள்ளது.

அணுக்கழிவுகளை பாதுகாப்பதற்கான கட்டமைப்பை உருவாக்கவும், அதுவரை கூடங்குளம் அணுமின் நிலையத்தில் உற்பத்தியை நிறுத்தக்கோரியும் தொடரப்பட்ட வழக்கு, கடந்த ஏப்ரல் 25ம் தேதி உச்சநீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தது. அப்போது, அணுஉலைக்கு வெளியே பாதுகாப்பான கட்டமைப்பு ஏற்படுத்த கூடுதலாக 50 மாதங்கள், அதாவது ஜூலை 2026ம் ஆண்டு வரை கால அவகாசம் வேண்டும் என்று இந்திய அணுசக்தி கழகம் சார்பில் மனுத் தாக்கல் செய்யப்பட்டது. ஆனால், அவ்வாறு கால அவகாசம் வழங்கக் கூடாது என மனுதாரரான பூவுலகின் நண்பர்கள் அமைப்பு கடும் எதிர்ப்பு தெரிவித்து உச்சநீதிமன்றத்தில் விளக்க மனு தாக்கல் செய்துள்ளது.

அதில், அணுக்கழிவுகளை உரிய முறையில் பாதுகாக்கவில்லை என்றால் அதிலிருந்து ஏற்படும் கதிர் வீச்சு மனித உயிர், விலங்குகள், சுற்றுச்சூழலுக்கு கடும் பாதிப்பை ஏற்படுத்தும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆயிரக்கணக்கான ஆண்டுகள் உயிர்ப்போடு இருக்கும் அணுக்கதிர்வீச்சை கக்கும் உலோகங்களை திறந்த வெளியில் தற்காலிகமான கட்டமைப்பில் வைப்பதை எவரும் ஏற்க மாட்டார்கள் என்றும், அவ்வாறு அணு மின்நிலைய வளாகத்திலேயே வைப்பது ஆபத்தை விளைவிக்கும் என்றும் பூவுலகின் நண்பர்கள் அமைப்பு தெரிவித்துள்ளது.

எனவே அணுக்கழிவு பாதுகாப்பு கட்டமைப்புகளை உருவாக்க நீதிமன்றம் கொடுத்த அவகாசம் முடிய மிகக்குறுகிய காலம் இருக்கும் நிலையில், கடைசி நேரத்தில் மீண்டும் கால நீட்டிப்பு அவகாசம் கோருவதை ஏற்கக்கூடாது என பூவுலகின் நண்பர்கள் தரப்பு தாக்கல் செய்துள்ள விளக்க மனுவில் தெரிவிக்கப்பட்டுள்ளது. அதேவேளையில், இந்த விளக்க மனுவுக்கு விரிவாக பதிலளிக்க 2 வாரம் அவகாசம் கோரி இந்திய அணுசக்தி கழகம் தரப்பில் கோரிக்கை மனு வழங்கப்பட்டுள்ளது. இந்த வழக்கு இன்று உச்சநீதிமன்றத்தில் விசாரணைக்கு வருகிறது.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com