திருச்சி: வடிவேலு பாணியில் குளத்தை கண்டுபிடிக்க சொல்லி ஆட்சியரிடம் மனு அளித்த நபர்

திருச்சி: வடிவேலு பாணியில் குளத்தை கண்டுபிடிக்க சொல்லி ஆட்சியரிடம் மனு அளித்த நபர்
திருச்சி: வடிவேலு பாணியில் குளத்தை கண்டுபிடிக்க சொல்லி ஆட்சியரிடம் மனு அளித்த நபர்
Published on

வடிவேலு பாணியில் ‘குளத்தை காணோம், கண்டுபிடித்து தரவும்’ என திருச்சி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மனு அளித்திருக்கிறார் சம்சுதீன் என்ற நபர். இதன் பின்னணியை தெரிந்துகொள்வோம்.

திருச்சி அரியமங்கலம் பகுதியை சேர்ந்தவர் சம்சுதீன். இவர் ஜனநாயக சமூக நலக் கூட்டமைப்பின் ஒருங்கிணைப்பாளராக இருக்கிறார். இன்று மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நடைபெற்ற மக்கள் குறைதீர்ப்பு கூட்டத்திற்கு புகார் அளிக்க வந்த சம்சுதீன், அரியமங்கலம் கோட்டம் மாநகராட்சிக்கு உட்பட்ட ஜிடி நாயுடு தெருவிற்கு பின்புறம் உள்ள வாணியன் குளம், ஆக்கிரமிப்பால் காணாமல் போனது தொடர்பாக மனு அளித்திருந்தார்.

தனது அந்த மனுவில், ‘ஜிடி நாயுடு தெருவிற்கு பின்புறமாக உள்ள வாணியன் குளம் பகுதி, மொத்தம் ஏழு ஏக்கருக்கு மேல் இருந்தது. கடந்த சில ஆண்டுகளாக கொஞ்சம் கொஞ்சமாக இந்த குளம் ஆக்கிரமிக்கப்பட்டு, இன்று அரை ஏக்கர் அளவிற்கு வந்து விட்டதாக சொல்லப்படுகிறது. ஆக்கிரமிப்பினால் கொஞ்சம் கொஞ்சமாக காணாமல்போன வாணியன் குளத்தை மீட்டுத் தர வேண்டும். அதில் உள்ள ஆக்கிரமிப்பை அகற்ற வேண்டும்’ என்று குறிப்பிட்டிருந்தார் சம்சுதீன்.

இது சம்பந்தமாக சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு அப்பகுதி மக்கள் பலமுறை சுட்டிக்காட்டியும் இதுவரை எந்த ஒரு நடவடிக்கையும் எடுக்கவில்லை என்பதாலும், மீதமுள்ள குளமும் கழிவுநீர் குட்டைபோல் தேங்கி உள்ளது என்பதாலும் இவ்விவகாரம் தொடர்பாக ஆட்சியரிடம் மனு அளித்துள்ளதாக கூறுகிறார் சம்சுதீன்.

இந்த ஆக்கிரமிப்பினை மேற்கொண்டவர்கள் அனைவரும், நீர் நிலைகளை மறித்து வீடுகளை கட்டி உள்ளனர் என்பதால் மழைக்காலத்தில் தண்ணீர் வடிய வழியில்லாமல் இருப்பதாக கூறுகிறார் சம்சுதீன். பொதுவாக இப்பகுதியில் அதிகப்படியாக பெருவெள்ளம் ஏற்படும்போது, இந்த குளம் வழியாக உய்யக்கொண்டான் வாய்க்காலை நீர் சென்றடையும். ஆனால் இப்போது ஆக்கிரமிப்பு செய்யப்பட்டு உள்ளதால் தண்ணீர் பாய்ந்தோடி வாய்க்காலை அடையவும் வழியில்லாமல், வடியவும் வாய்ப்பில்லாமல் இருப்பதாக வேதனை தெரிவிக்கிறார் அவர்.

நீர் நிலைகளை ஆக்கிரமித்து அப்பகுதியில் வீடுகள் கட்டப்பட்டிருப்பதாகவும், மழைக்காலத்தில் வரும் பெருவெள்ளம் இந்த குளம் வழியாக உய்யக்கொண்டான் வாய்க்காலை சென்றடையும் நிலையில், இப்போது ஆக்கிரமிப்பு செய்யப்பட்டு உள்ளதால் தண்ணீர் வடிய வழியில்லை என்றும் குறிப்பிட்டுள்ளார் அவர்.

தனது கோரிக்கையின் இறுதியாக, கொஞ்சம் கொஞ்சமாக காணாமல் போன இந்த குளத்தை மீட்டுத் தர வலியுறுத்தியும், அதில் உள்ள ஆக்கிரமிப்பை அகற்ற கோரியும் மனு அளித்திருக்கிறார் அவர்.

பிருந்தா

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com