மேட்டுப்பாளையத்தில் சுற்றிவரும் காட்டுயானை பாகுபலிக்கு ரேடியோ காலர் பொருத்த கும்கி யானைகள் கலீம், மாரியப்பன் வரவழைக்கப்பட்டுள்ளது.
கடந்த ஆறு மாதங்களுக்கு மேலாக கூட்டத்தில் இருந்து பிரிந்து மேட்டுப்பாளையம் பகுதிகளில் தனியே சுற்றிவருகிறது பாகுபலி யானை. காட்டுக்குள் அனுப்பினாலும் குடியிருப்பு பகுதிகளிடையே சுற்றிவரும் யானையை கண்காணிக்க, யானையின் கழுத்தில் ரேடியோ காலர் பொருத்த முயற்சி மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
யானையை சமவெளிப்பகுதிக்கு கொண்டுவர வேண்டும் என்பதால், நேற்று இரவு டாப்ஸ்லிப் பகுதியில் உள்ள வரலியாறு வனத்துறை முகாமில் இருந்து கலீம் என்ற கும்கி யானை மேட்டுப்பாளையம் அழைத்து வரப்பட்டது. இன்று மேலும், மாரியப்பன் என்ற கும்கி யானை வனத்துறைக்கு சொந்தமான லாரி மூலம் கொண்டு வரப்பட்டுள்ளது.
தற்போது கலீம் மற்றும் மாரியப்பன் ஆகிய இரு கும்கி யானைகளும் மேட்டுப்பாளையத்தில் உள்ள வனத்துறைக்கு சொந்தமான அரசு மரக்கிடங்கின் பின்புறமுள்ள வனம் சார்ந்த பகுதியில் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. பிடிக்கப்பட வேண்டிய பாகுபலி என்ற காட்டு யானை அளவில் பெரியது என்பதால் மேலும் ஒரு கும்கி யானை தேவைப்படுமா அல்லது அழைத்து வரப்பட்ட இரு கும்கி யானைகள் உதவியோடு பாகுபலியை நெருங்க இயலுமா என வனத்துறை அதிகாரிகள் ஆலோசனை நடத்தி வருகின்றனர்.
கும்கி யானைகள் வந்தடைந்துள்ளதால் காட்டு யானையின் நடமாட்டத்தை தொடர்ந்து கண்காணித்து வரும் வனத்துறையினர் அடுத்த கட்ட பணிகளை துவங்கியுள்ளனர். இன்னும் ஓரிரு நாட்களில் கும்கிகளின் உதவியோடு காட்டு யானை பாகுபலியை சுற்றி வளைத்து ரேடியோ காலர் பொருத்தும் பணி துவங்கும் என எதிர்ப்பார்க்கப்படுகிறது.