மக்களின் சுகாதாரத்திற்கு பெரும் அச்சுறுத்தலாக விளங்கிவரும் பிரச்சனைகளில் ஒன்றான, ஆன்டிபயாட்டிக் மருந்துகளுக்கு எதிர்ப்பு காட்டும் நோய்த் தொற்றுகளைச் (Antibiotic Resistance) சமாளிக்க, அமெரிக்க ஆராய்ச்சியாளர்கள் புதிய மருந்தை தயாரித்துள்ளனர்.
கலிஃபோர்னியாவின் க்ரிப்ஸ் நிறுவன ஆராய்ச்சியாளர்கள், தற்போதுள்ள வான்கோமைசின் (vancomycin) என்ற மருந்தை மாற்றி ஒரு மேஜிக்கல் பதிப்பை தயாரித்துள்ளதாகத் தெரிவித்துள்ளனர்.
சிறுநீர்ப் பாதைக் குழாய் மற்றும் காயங்களில் தொற்று ஏற்படுத்தும் சாதாரண பாக்டீரியாக்களை எதிர்கொள்ளும் தன்மையை வான்கோமைசின் இழந்துவருகிறது என்று அவர்கள் குறிப்பிட்டனர். இந்த வான்கோமைசினின் மேம்படுத்தப்பட்ட கலவை, வித்தியாசமான வழிகளில், சுமார் ஆயிரம் மடங்கு அதிக ஆற்றலுடன் தாக்கும். அதனால் நோய் தொற்றுகள் இந்த மருந்தை எதிர்த்துப் போராட முடியாது என்று தெரிவித்துள்ளனர்.
தன்னை அழிக்கப் பயன்படுத்தப்பட்ட மருந்துகளுக்கு எதிராக வீரியத்தை வளர்த்துக்கொண்டு நுண்கிருமிகள் தொடர்ந்து வளரும் நிலையே ஆன்டிபயாட்டிக் எதிர்ப்புத்தன்மை எனப்படும். இந்த ஆன்டிபயாட்டிக் எதிர்ப்புத்தன்மை உலகளாவிய பிரச்சனையாக உருவெடுத்துள்ளது என உலகின் மருத்துவர்கள் ஒரே குரலில் எச்சரிக்கிறார்கள். இந்நிலையில், மேம்படுத்தப்பட்ட மேஜிக்கல் மருந்தைக் கண்டுபிடித்துள்ளது முக்கியத்துவம் பெறுகிறது.