"நம் நாட்டில் பொருளாதார வளர்ச்சியை அடையும் நோக்கத்தில் சுற்றுச்சூழல் பெரிதும் அழிவுக்கு உள்ளாகியுள்ளது" என்று ஈஷா அறக்கட்டளை நிறுவனர் ஜகி வாசுதேவ் கவலை தெரிவித்துள்ளார்.
இதுதொடர்பாக ஈஷா அறக்கட்டளை வெளியிட்ட செய்தியில், "ஈஷா சார்பில் 'ஆனந்த சங்கமம்' என்ற சிறப்பு நிகழ்ச்சி, ஆன்லைன் வாயிலாக ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. இதில் பொதுமக்களின் பல்வேறு கேள்விகளுக்கு அறக்கட்டளையின் நிறுவனர் ஜகி வாசுதேவ் பதில் அளித்தார். அதில், 'எனக்கு தெரிந்தவரை இந்திய குருமார்களில் யாருமே பொருளாதாரம் பற்றியும் சுற்றுச்சூழல் பற்றியும் உங்கள் அளவிற்கு பேசியது இல்லை. இந்த 2 விஷயங்களுக்கு நீங்கள் ஏன் இவ்வளவு முக்கியத்துவம் தருகிறீர்கள்?' என்ற கேள்வி கேட்கப்பட்டது.
அதற்கு பதிலளித்த ஜகி வாசுதேவ், "பொருளாதாரத்திற்கு நான் முக்கியத்துவம் தரவில்லை. நீங்கள்தான் அதற்கு அதிக முக்கியத்துவம் கொடுத்துள்ளீர்கள். அதனால், அதுகுறித்து பேச வேண்டியுள்ளது. அதேசமயம், நம் நாட்டில் பொருளாதார வளர்ச்சியை அடையும் நோக்கத்தில் சுற்றுச்சூழல் பெரிதும் அழிவுக்கு உள்ளாகியுள்ளது.
உலகில் ஊட்டச்சத்து குறைபாடு உள்ள மக்களில் 33 சதவீதம் பேர் இந்தியாவில் உள்ளனர். இதற்கு அடிப்படை காரணம் மண்ணில் தேவையான சத்துகள் இல்லை. பொதுவாக, விவசாய நிலத்தில் 4 முதல் 5 சதவீதம் கரிம வளம் இருக்க வேண்டும். குறைந்தப்பட்சம் 2 சதவீதம் கரிம வளம் இருந்தால்தான் அதை மண் என்றே சொல்ல முடியும் என ஐ.நா அமைப்பு கூறுகிறது. ஆனால், நம் நாட்டு மண்ணில் சராசரி கரிம வள அளவு வெறும் 0.68 சதவீதம்தான் உள்ளது. இந்த நிலை இப்படியே போனால் அடுத்த 30 ஆண்டுகளில் மண், மணலாக மாறி நாட்டில் விவசாயமே செய்ய முடியாத நிலை ஏற்படும். இப்படி இருக்கும்போது சுற்றுச்சூழல் குறித்து பேசாமல் எப்படி இருக்க முடியும்?
நம் உடலே இந்த மண்ணில் இருந்து வந்ததுதான். இதை பலரும் உணரமால் இருக்கிறார்கள். அவர்கள் மண் வளத்தை பாதுகாப்பது என்னுடைய பிரச்னை அல்ல என எண்ணி கொண்டு இருக்கிறார்கள். மண் வளமாக இருந்தால்தான் சத்தான உணவு கிடைக்கும். ஊட்டசத்துமிக்க உணவு இல்லாமல் தவிக்கும் மக்களிடம் சென்று ஆன்மிகம் குறித்து பேசுவது அசிங்கமான செயல். அதை நான் ஒரு போதும் செய்யமாட்டேன்.
இதுபோன்ற பிரச்னைகள் இதற்கு முன்னர் இருந்தது இல்லை. ஆழ்வார்கள், சித்தர்கள் வாழ்ந்த சமயத்தில் இதுபோன்ற பிரச்னைகள் இல்லை. அதனால், அவர்கள் பேசவில்லை. இப்போது இது மிக முக்கிய பிரச்னையாக இருக்கிறது. அதனால், நான் சுற்றுச்சூழல் குறித்து அதிகம் பேசுகிறேன்.
தமிழ்நாட்டில் உள்ள ஒவ்வொருக்கும் ஒரு சொட்டு ஆன்மிகத்தையாவது கொண்டு சேர்த்து விட வேண்டும் என்பது என்னுடைய விருப்பம். அதற்காக, உயிர் நோக்கம், சூரிய சக்தி போன்ற யோக பயிற்சிகளை தமிழ்நாடு முழுவதும் இலவசமாக கொண்டு சேர்க்கும் பணியை வரும் ஆண்டுகளில் தீவிரப்படுத்த இருக்கிறோம். ஈஷா யோகா மையம் என்பது ஏராளமான சாமானியர்களின் உதவியாலும் ஆதரவாலும் பக்தியுணர்வாலும் உலகம் போற்றும் அளவிற்கு இப்போது வளர்ந்துள்ளது. இதை தமிழ் மக்கள் முழுமையாக பயன்படுத்தி கொள்ள வேண்டும்.
தமிழ் கலாசாரத்தை மறக்காமல் இருக்க, வாரத்தில் ஒரு நாளாவது ஆண்கள் வேஷ்டியும், பெண்கள் சேலையும் அணிந்துகொள்ள வேண்டும். பக்தியில் ஊறிய தமிழ் கலாச்சாரதை எப்போதும் பேணி வளர்க்க வேண்டும்" என்றார் ஜகி வாசுதேவ்.
ஈஷா அறக்கட்டளை வெளியிட்ட செய்திக்குறிப்பில் "முன்னதாக, ஈஷா சார்பில் 'உயிர் நோக்கம்' என்ற 3 நாள் யோகா நிகழ்ச்சி ஜூலை 23 முதல் 25 ஆம் தேதி வரை ஆன்லைனில் இலவசமாக நடைபெற்றது. இதில் தமிழ்நாடு முழுவதும் இருந்து சுமார் 27,000 பேர் பங்கேற்றனர். அதன் நிறைவு நிகழ்வாக இந்த ஆனந்த சங்கமம் நிகழ்ச்சி நடைபெற்றது" என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.