கொடைக்கானலுக்கு செல்லும் சுற்றுலா பயணிகள் மது அருந்திவிட்டு காலி பாட்டில்களையும், பிளாஸ்டிக் பாட்டில்களையும் வனத்திற்குள் வீசிச் செல்லும் போது, அப்பகுதி மக்களை மட்டும் எப்படி குற்றம் சாட்ட முடியும்? என நீதிபதிகள் கேள்வி எழுப்பினர்.
ஜட்கா எனும் நிறுவனத்தின் சார்பில் அங்கு பணியாற்றும் அவிஜித் மைக்கேல் உயர்நீதிமன்ற மதுரைக்கிளையில் பொதுநல வழக்கினைத் தாக்கல் செய்திருந்தார். அதில், " கொடைக்கானல் சீராடும்கானல் பகுதியில் 3.77 ஏக்கர் பரப்பளவில் அமைந்துள்ள இடத்தில் கொடைக்கானல் பகுதி கழிவுகள் கொட்டப்படுகின்றன. காய்கறி சந்தை கழிவுகள், கண்ணாடி, பிளாஸ்டிக், காதிதம், உணவுக்கழிவுகள் என எவையும் பிரிக்கப்படாமல் ஒட்டுமொத்தமாக இங்கு குவிக்கப்படுகின்றன.
இந்த பகுதியிலிருந்து கழிவுகள் பாதுகாக்கப்பட்ட வனப்பகுதியான டைகர் சோலை பகுதிக்குள் செல்லாத வண்ணம் அமைக்கப்பட்டிருந்த சுவரும் 2018ல் சிதிலமடைந்த நிலையில், தற்போது அங்கு கொட்டப்படும் டன் கணக்கிலான கழிவுகள் பாதுகாக்கப்பட்ட வனப்பகுதிக்குள் செல்லும் நிலை உள்ளது. இதனால் டைகர் சோலை மற்றும் பெருமாள் மலை பகுதியின் நிலத்தடி நீர் மாசடைந்துள்ளது. ஆகவே, கொடைக்கானல் சீராடும்கானல் பகுதியில் உள்ள குப்பை கொட்டும் மையத்தை நிரந்தமாக மூடவோ, வேறு இடத்திற்கு மாற்றவோ உத்தரவிட வேண்டும். அதுவரை அதனை முறைப்படுத்த நிபுணர் குழுவை அமைத்து உத்தரவிட வேண்டும்" என கூறியிருந்தார்.
இந்த வழக்கு நீதிபதிகள் பி.என்.பிரகாஷ், ஹேமலதா அமர்வு முன்பாக விசாரணைக்கு வந்தது. மனுதாரர் தரப்பில்," கொடைக்கானல் பகுதி மக்கள் குப்பைகளை முறையாக தரம் பிரித்து வழங்காததே இதற்கு காரணம்" என குறிப்பிட்டார். அதற்கு நீதிபதிகள், "கொடைக்கானலுக்கு செல்லும் சுற்றுலா பயணிகள் மது அருந்திவிட்டு காலி பாட்டில்களையும், பிளாஸ்டிக் பாட்டில்களையும் வனத்திற்குள் வீசிச் செல்லும் போது, அப்பகுதி மக்களை மட்டும் எப்படி குற்றம் சாட்ட முடியும்? என கேள்வி எழுப்பினர்.
மனுதாரர் தரப்பில், "ஏற்கனவே மாசு கட்டுப்பாட்டு வாரியம் ஏற்கனவே இந்த இடத்தை ஆய்வு செய்து தடுப்புச் சுவரைக் கட்டுமாறு உத்தரவிட்டது. இருப்பினும் தற்போது வரை சுவர் கட்டப்படவில்லை" என தெரிவிக்கப்பட்டது.
அதற்கு நீதிபதிகள், "பிற மனிதனைப் பற்றிய அக்கறை இன்மையும், அதீத பேராசையும் நிறைந்து இருக்கும் சூழலில், நீதிமன்றம் ஒரு உத்தரவை பிறப்பித்து ஒரே இரவில் அனைத்தையும் மாற்றிவிட இயலாது. சிங்கப்பூர், மலேசியா போன்ற நாடுகளின் சுத்தத்தை பெருமையாக பேசும் நம் மக்கள் தெருவில் குப்பைகளை போடவும், எச்சில் துப்பவும் யோசிப்பதில்லை என கருத்து தெரிவித்து , வழக்கு தொடர்பாக மத்திய, மாநில வனத்துறை செயலர்கள், நகர திட்டமிடல் இயக்குநர், திண்டுக்கல் மாவட்ட ஆட்சியர், வன அலுவலர், கொடைக்கானல் நகராட்சித் தலைவர் பதில்மனு தாக்கல் செய்ய உத்தரவிட்டு வழக்கை 8 வாரங்களுக்கு ஒத்திவைத்தனர்.
இதையும் படிக்க: ராஜராஜனின் புகழால் ராஜேந்திர சோழனின் பெருமைகள் மறைந்துபோனதா?..பிரமிக்கும் போர் சாதனைகள்!