ஜூலை மாதம் பீகார், அசாம், அருணாச்சல பிரதேசம் மற்றும் மேகாலயாவின் சில பகுதிகளில் பலத்த மழை பெய்ந்ததால் வெள்ளம் ஏற்பட்டது. ஆகஸ்ட் முதல் வாரத்தில் மும்பை, கொங்கன் மற்றும் கர்நாடகா மற்றும் ராஜஸ்தானின் பகுதிகளில் பெய்த மழையினாலும் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது.
கேரளாவின் இடுக்கியில் பெய்த மழை அங்குள்ள மக்களின் இயல்பு வாழ்க்கையை முடக்கியது. அங்கு நிலச்சரிவு ஏற்பட்டதில் சுமார் 55 பேர் உயிரிழந்தனர். இப்படி நாடு முழுவதும் பெய்த மழையினால் 11 மாநிலங்களில் 868 பேர் வெள்ளத்தால் உயிரிழந்துள்ளதாக உள்துறை அமைச்சகத்தின் பேரிடர் மேலாண்மை பிரிவு அறிக்கை வெளியிட்டுள்ளது. கடந்த ஆண்டு சுமார் 908 பேர் உயிரிழந்திருந்தனர்.
“இந்த ஆண்டு வழக்கத்திற்கும் அதிகமான மழை பதிவாகியுள்ளது. கடந்த வாரம் மட்டுமே பல மாநிலங்களில் பலத்த மழை பொழிவு பதிவாகியுள்ளது. வடமேற்கு இந்தியாவில் மழை பொழிவில்லை என எண்ணியிருந்தவர்களின் குறையை போக்கியுள்ளது. ஒடிசா, சத்தீஸ்கர், ராஜஸ்தானின் பகுதிகளிலும் அதிக மழை பெய்துள்ளன.
ஆகஸ்ட் 19 அன்று வங்காள விரிகுடாவில் குறைந்த காற்றழுத்த தாழ்வு உருவாக வாய்ப்புள்ளதால் அதிக மழை பெய்யக்கூடும். இதன் மூலம் வரும் நாட்களில் வடமேற்கு மற்றும் மத்திய இந்தியாவில் அதிக மழை பெய்யும்” என்று தேசிய வானிலை மையத்தின் மூத்த விஞ்ஞானி ஆர்.கே.ஜெனமணி தெரிவித்துள்ளார்.