எச்.ஐ.வி வைரஸை எதிர்க்கக்கூடிய ஆற்றலை பசுக்கள் வெளிப்படுத்தி இருப்பதாகவும் அது எய்ட்ஸ் நோய்க்கு எதிரான தடுப்பு மருந்தை உருவாக்க உதவலாம் என்றும் அமெரிக்க ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர்.
எய்ட்ஸ் நோய்க்கு காரணமான எச்.ஐ.வி -ஐ அழிக்க நீண்ட காலமாக ஆராய்ச்சி நடந்துவருகிறது. இந்நிலையில் பசுக்களில் இருந்து எச்.ஐ.வி -ஐ அழிப்பதற்கான ஒருவகை மருந்தை பெற முடியும் என புதிய ஆய்வு முடிவில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. அதாவது சிக்கலான பாக்டீரியாக்களை செரிமானம் செய்யக்கூடிய அமைப்பை மாடுகள் கொண்டுள்ளதால், இந்த உச்சபட்ச நோய் எதிர்ப்பை அவை பெற்றுள்ளதாகக் கருதப்படுகிறது என்று அமெரிக்காவின் நேஷனல் இன்ஸ்டிட்யூட்ஸ் ஆஃப் ஹெல்த் (National Institutes of Health) கூறியுள்ளது.
ஆய்வாளர்கள் எச்.ஐ.வி வைரஸ்களில் உள்ளதை ஒத்த புரதத்தினை மாடுகளில் செலுத்தி ஆய்வு செய்துள்ளனர். ஆய்வின் முடிவில் பசுக்கள் அந்த வைரஸ்க்கு எதிரான பிறபொருளை உற்பத்தி செய்துள்ளன. இதன் அடிப்படையிலேயே HIV தொடர்பான ஆராய்ச்சிக்கு பசுக்களில் இருந்து எச்.ஐ.வி தடுப்பாற்றல் ஆன Broadly Neutralising Antibodies (Bnabs)-ஐ பெற்றுக்கொள்ள முடியும் என ஆய்வாளர்கள் நம்பிக்கை தெரிவித்துள்ளனர்.