சென்னை மாநகரில் உள்ள கடைகளில் அனுமதியின்றி வெளிநாட்டு சிகரெட்டுகள் விற்கப்படுவது அதிகரித்துள்ளது. இங்கு விற்கப்படும் சிகரெட்டுகள் அனைத்தும் வெளிநாடுகளில் இருந்து கடத்தி வரப்பட்டு விற்கப்படுகிறது. சென்னை பெருநகர மாநகராட்சி அதிகாரிகள் பெட்டிக் கடைகளில் சோதனை நடத்தி இந்த சட்டவிரோத நடவடிக்கையை தடுக்க வேண்டும் என தன்னார்வலர்கள் கோரிக்கை விடுக்கின்றனர்.
'யூரோமானிட்டர்' எனும் தொண்டு அமைப்பின் ஆய்வின்படி, சட்டத்துக்கு புறம்பாக கடத்தி வரப்படும் சிகரெட்டுகளின் விற்பனை கடந்த 10 ஆண்டுகளில் 100 சதவீதம் அதிகரித்துள்ளது தெரிய வந்துள்ளது. மேலும் இந்த வியாபாரம் மொத்த சிகரெட்டு விற்பனையில் 20 சதவீதம் உயர்ந்துள்ளதாகவும் குறிப்பிட்டுள்ளது. உலக அளவில் சட்டத்துக்கு புறம்பான சிகரெட்டு விற்பனையில் இந்தியா 5- ஆவது மிகப் பெரிய சந்தையாக உருவாகியுள்ளது என்ற புள்ளிவிவரம் வேதனையளிக்கிறது.
குறிப்பாக தமிழகத்தில் கடந்த சில மாதங்களாக கடத்தல் சிகரெட்டுகள் அமோகமாக விற்பனையாகிறது. இவற்றின் மீது எச்சரிக்கை வாசகங்கள் இடம் பெறுவது இல்லை. மேலும், சுங்கம், வாட் உள்ளிட்ட வரிகள் விதிக்கப்பட முடியாததால் மிக கவர்ச்சிகரமான மற்றும் குறைந்த விலையில் தமிழகத்தில் கடத்தல் சிகரெட்டுகள் விற்பனை செய்யப்பட்டு வருகின்றன. அதுவும், சென்னை போன்ற பெருநகரங்களில் இந்தச் சிகரெட்டுகளை புகைப்பதற்கான மோகமும் அதிகமாகவே உள்ளது.
எதன் வழியாக கடத்தல்?
அண்மையில் கூட சென்னை விமான நிலையத்தில் சுமார் ரூ.36 லட்சம் மதிப்பிலான வெளிநாட்டு சிகரெட்டுகளை சுங்கத் துறை அதிகாரிகளால் பறிமுதல் செய்யப்பட்டது. இதனை கடத்திய முகமது கவுஸ் மற்றும் அப்ஸர் அலி ஆகியோர் கைது செய்யப்பட்டனர். இவர்கள் இந்த வெளிநாட்டு சிகரெட்டுகளை துபாயில் இருந்து எமிரேட்ஸ் விமானம் மூலமாக திருச்சி கொண்டு வந்துள்ளனர். பின்பு, அங்கிருந்து சென்னைக்கு வந்துள்ளது அவர்களிடம் நடத்தப்பட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது.
பொதுவாகவே வெளிநாட்டு சிகரெட்டுகள் சென்னை, தூத்துக்குடி துறைமுகம் மற்றும் விமான நிலையங்கள் வழியாக தமிழகத்துக்கு கடத்தி வரப்படுகின்றன. இங்கிருந்து பெரும் விற்பனையாளர்கள் மூலமாக சிறு சிறு கடைகளுக்கு செல்கிறது.
இந்தச் சிகரெட்டுகள் விற்பனையில் லாபம் அதிகமென்பதால் வியாபாரிகளும் இதனை வாங்கி விற்று வருகின்றனர்.
மேலும், பல வியாபாரிகளுக்கு இவை சட்டத்துக்கு புறம்பாக இறக்குமதி செய்யப்படும் சிகரெட்டுகள் என தெரிவதில்லை. இதுகுறித்த விழிப்புணர்வும் இல்லை என தன்னார்வலர்கள் வேதனை தெரிவிக்கின்றனர்.
கடத்தி வரப்படும் வெளிநாட்டு சிகரெட்டு பெட்டிகளில் இந்திய சட்டப்படி எந்த ஒரு எச்சரிக்கை படமும், வாசகங்களும் இடம் பெறுவதில்லை. சில வெளிநாட்டு சிகரெட்டு பெட்டிகளில் மிகச் சிறிய அளவிலும், வெளிநாட்டு மொழிகளிலும் எச்சரிக்கை வாசகங்களை காண முடிகிறது. நம் நாட்டின் சட்டப்படி சிகரெட் பெட்டிகளில் 85 சதவீத அளவில் எச்சரிக்கை படம் ஒவ்வொரு புகையிலை பொருள்களின் பாக்கெட்டிலும் இடம்பெற வேண்டும் என்பது விதி.
மேலும், இறக்குமதி அல்லது கடத்தப்படும் புகையிலை பொருள்களின் பெட்டிகளில் எம்.ஆர்.பி. மற்றும் தயாரிப்பு தேதியும் இல்லை. இதன் காரணமாக, வியாபாரிகள் அதிக லாபம் ஈட்டுகின்றனர். உதாரணத்துக்கு வெளிநாட்டு சிகரெட்டு பாக்கெட்டின் விலை ரூ.30 என்றால் அதில், ரூ.8 லாபம் கிடைக்கிறது. ஆனால் நம் நாட்டு சிகரெட்டு பெட்டிகளில் மிக குறைந்த லாபமே கிடைக்கின்றது. உதாரணத்துக்கு 10 சிகரெட்டுகள் கொண்ட பெட்டி ரூ.150 என்றால் கடைக்காரருக்கு ரூ.10 மட்டுமே லாபமாக கிடைக்கிறது.
வெளிநாட்டு சிகரெட்டுகளின் வரத்து மிக அதிக அளவில் வருவதற்கு உள்நாட்டு சிகரெட்டுகளின் மேல் விதிக்கப்படும் அதிக அளவிலான வரி விதிப்பே காரணமாக கூறப்படுகிறது. அது மட்டுமல்லாமல் உள்நாட்டு சிகரெட் மற்றும் புகையிலை பொருள்கள் மீதான சட்ட விதிகளும் முக்கிய காரணம் என்று தன்னார்வலர்கள் தெரிவிக்கின்றனர்.