பெண்களுக்கு இயற்கையாக நடக்கக்கூடிய ஒரு உடல் ரீதியிலான மாறுதல் மாதவிடாய். ஆனால் இது அனைத்து பெண்களுக்கும் சரிவர நடக்கிறதா என்றால் இல்லை என்கின்றனர் மருத்துவர்கள்.
அதிக உதிரப்போக்கு, உடல் சோர்வு, அதிக வலி, உடல் பருமன், முறையற்ற மாதவிடாய் உள்ளிட்ட பல பிரச்னைகளை மாதவிடாய் சுழற்சியில் பெண்கள் சந்திக்கின்றனர். குறிப்பாக இளம் வயதுடைய பெண்களே அதிகமாக பாதிக்கப்படுவதாக கூறும் மருத்துவர்கள் அதற்கான காரணங்களையும் முன் வைக்கின்றனர்.
மாதவிடாய் பிரச்னையால் வருங்காலத்தில் குழந்தை பிறப்பதில் சிக்கல் ஏற்படும் என்றும் உரிய சிகிச்சை எடுத்து கொண்டாலும் பெண்கள் தங்கள் உடல்நலனை பேணுவதில் அதிக கவனம் எடுத்து கொள்ள வேண்டும் என்கின்றனர் மருத்துவர்கள்.
மாதவிடாய் பிரச்னைக்கு சரியான உணவு முறையை மேற்கொண்டாலே போதும் என்று அறிவுறுத்தும் மருத்துவர்கள், காய்கறிகள், கீரைகள் போன்றவை மாதவிடாய் பிரச்னைக்கு மட்டுமின்றி உடல் நலனுக்கும் ஏற்றது என்கிறார்கள். பாதாமில் நார்சத்து புரோட்டீன் அதிகம் அவற்றையும் தினசரி உட்கொள்வது நல்லது என்று கூறும் மருத்துவர்கள், முந்திரியை உட்கொள்வதால் ஹார்மோன்களின் செயல்பாடு சீராக இருக்கும் என்கிறார்கள். தயிர் சோயாபால் பன்னீர், திராட்சை சாறு அறுகம்புல் சாறு போன்றவற்றையும் சேர்த்துக் கொள்ள வேண்டும் என்று கூறுகிறார்கள். மீன் முட்டை போன்றவையும் மாதவிடாய் சுழற்சியை சீராக்கும் என்பது மருத்துவர்களின் அறிவுறுத்தலாக இருக்கிறது.