இன்றியமையாத பொருட்களில் ஒன்றாகிவிட்டது செல்போன். வீட்டிற்கு ஒரு செல்போன் இருந்த காலம் போய், விளையாட ஒன்று, உரையாட ஒன்று என செல்போன்கள் உலா வருகின்றன. ஸ்மார்ட்போன், உபயோகப்படுத்துவதால் ஏற்படும் பின் விளைவுகளை யாரும் யோசிப்பது இல்லை.
செல்போன்களை அதிகமான நேரம் பயன்படுத்துவதால் உடல்நலத்திற்குப் பாதிப்புகள் ஏற்படும் என தெரிந்தும் பலர் அதன் உபயோகத்தைக் குறைப்பதில்லை. அதன்படி, தற்போது ஓர் அதிர்ச்சியான ஆய்வு வெளிவந்துள்ளது. மொபைல் போன்களில் இருந்து வெளியேறும் கதிர்வீச்சு, மூளையில் கட்டியை உருவாக்கும் என எய்ம்ஸ் நரம்பியல் மருத்துவர் டாக்டர் காமேஷ்வர் பிரசாத் கூறியுள்ளார்.
எய்ம்ஸ் மருத்துவக் குழு ஆய்வின் படி, குறைந்தது 10 ஆண்டுகள் அல்லது 1,640 மணி நேரத்துக்கு அதிகமாக செல்போன் பயன்படுத்துபவர்களின் மூளை கடுமையாகப் பாதிக்கப்படுகின்றன. உதாரணத்துக்குப் புற்றுநோயால் பாதிக்கப்பட்ட 100 பேர் இருக்கும் இடத்தில், செல்போனிலிருந்து வெளிவரும் இந்த கதிர்வீச்சு தாக்கும் போது 1.33 மடங்கு நோயின் தீவிரம் அதிகரிப்பதாக அந்த ஆய்வில் கண்டறியப்பட்டுள்ளது. மொபைல் போன்கள் தங்கள் ஆண்டெனாக்களிருந்து, ரேடியோ அலைகளை வெளியிடுகிறது. இந்த அலைகள் புற்றுநோயை உருவாக்கும் திறன் கொண்டவை என புற்றுநோய் ஆராய்ச்சிக்கான சர்வதேச அமைப்பு (ஐஏஆர்சி) உறுதிபடுத்தியுள்ளது. இந்த ரேடியோ அலைகள் குழந்தைகளின் காது அருகே உள்ள மென்மையான திசுக்களைப் பாதித்து மூளையில் கட்டியை ஏற்படுத்தும் என கூறுகின்றனர் எய்ம்ஸ் மருத்துவர்கள்.