சிறிய காய்ச்சல், தலைவலி என மருத்துவர்களிடம் சென்றால் கூட “எத்தன நாளா காய்ச்சல் இருக்கு...?” என்பதற்கு அடுத்தப்படியாக அவர்கள் கேட்கும் கேள்வி “என்ன
சாப்ட்டீங்க...?” என்பதுதான். அந்த அளவிற்கு உணவிற்கும் மனிதனது உடல் ஆரோக்கியம் மற்றும் செயல்பாடுகளுக்கும் இடையே பெரிய தொடர்பு இருக்கிறது.
தற்போது உலகையே அச்சுறுத்தி வரும் ஆட்கொல்லி நோய் கொரோனாவிலிருந்து மக்கள் தங்களை தற்காத்துக் கொள்ள அனைத்து நாட்டு அரசாங்கமும் பல்வேறு
வழிகாட்டுதல்களை வழங்கி வருகின்றன. கூடவே மக்கள் என்ன மாதிரியான உணவுகளை சாப்பிடலாம் அல்லது கூடாது என்பது குறித்தும் மக்களிடையே குழப்பங்கள்
நிலவி வருகின்றன. இது குறித்து உணவியல் நிபுணர் Shiny Surendran-னிடம் பேசினோம்.
மக்கள் கொரோனா குறித்து அதிகமா பயப்படுறாங்க அதற்கு முதல்ல என்ன செய்யலாம்...?
“கொரோனா வந்திடுமோ’னு நினச்சு முதல்ல நாம பயப்படக் கூடாது, பயப்படும்போது உடலில் சுரக்கும் ஒருவகை அமிலமானது உடலின் எதிர்ப்பு சக்தியை குறைக்கும்.
அதுவே உங்களை பலவீனப்படுத்திடும் அதனால் தைரியமா இருங்க. நல்ல உணவுகளை சாப்பிடுங்க.
சாப்பாடுன்னதும் நினைவுக்கு வருவது தற்போதைய சூழலில் என்ன சாப்பிடலாம் சாப்பிடக் கூடாது...?
நல்ல புரதம் கிடைக்கும் அனைத்து உணவுகளையும் சாப்பிடலாம்.
புரதம் மாமிச உணவுகள்ல அதிகமா இருக்கு. ஆனால் மக்கள் மாமிச உணவுகளை சாப்பிட பயப்படுறாங்களே...?
இது வழக்கமா நடக்குறதுதான். ஆனால் மாமிச உணவுகள் குறித்து பயப்பட வேண்டாம். மாமிச உணவுகளுக்கும் கொரோனாவுக்கும் எந்த தொடர்பும் இல்லை. அதே நேரம்,
ஹோட்டலில் ஆர்டர் பண்ணி சாப்பிடுறத தவிர்க்கலாம். தந்தூரி சிக்கன் போன்ற உணவுகளில் கலக்கப்படும் நிறமிகள் உடலுக்கு நல்லது இல்லை. கறி, மீன் இவற்றை
வீட்டில் வாங்கி நன்கு வேகவைத்து சமைத்து சாப்பிடுவது நல்லதுதான்.
அசைவம் தவிர முக்கியமாக இந்த சீசன்ல கிடைக்கும் காய்கறிகள் பழங்களை மிஸ் பண்ணாம சாப்பிடுங்க. பப்பாளி, தர்ப்பூசணி எல்லாம் ரொம்ப நல்லது, நிறைய
எடுத்துக்குங்க. வைட்டமின் சி அதிகம் இருக்கும் பழங்களை அவசியமா எடுத்துக்கணும். கொய்யா, கமலா ஆரஞ்சு, சாத்துக்குடி, நெல்லிக்காய், புதினா கொத்தமல்லி சட்னி
இதெல்லாம் சாப்பிடலாம். இஞ்சிய தேன் கலந்து சாப்பிடலாம். இஞ்சிய கொதிக்கவச்சு கூட டீ தயாரித்து சாப்பிடலாம். பால் மற்றும் மோர்ல மஞ்சள் பொடி போட்டு
சாப்பிடுவது நல்லது.
சைவ உணவு மட்டுமே சாப்பிடுகிறவர்கள் எப்படி தங்கள் உடலில் எதிர்ப்பு சக்தியை தக்கவைத்துக் கொள்வது...?
உண்மையில் காலை உணவு ரொம்பவே முக்கியம். அப்போதுதான் அதிகமாக உடலுக்கு எனர்ஜி தேவை. நீங்க இட்லி வித் சாம்பார் சாப்பிட்டாலும் கூட சாம்பார
தண்ணியாக வைக்காம நிறைய பருப்புகள் சேர்த்து திக்கா வச்சு சாப்பிடுங்க. முளைகட்டிய தாணியங்களை சாப்பிடுங்க. பூண்டு அவ்ளோ நல்லது அதை முடிஞ்ச அளவு
உங்கள் உணவில் அரைத்து பயன்படுத்துங்கள். ட்ரை ப்ரூட்ஸ் அதாவது உலர் திராட்சை முந்திரி பாதாம் இதெல்லாம் எதிர்ப்பு சக்திய நன்கு வளர்க்கும். தினம் ஒரு முட்டை
சாப்பிடுங்க. தினம் ஒரு கீரை சாப்பிடுங்க.
என்ன மாதிரி உணவுகளை சாப்பிடக் கூடாது...?
முதல்ல கொரோனா உணவின் மூலமா பரவக் கூடிய நோய் அல்ல. ஆனாலும் சில உணவுகள் எதிர்ப்பு சக்தியை குறைக்கும் என்பதால் கவனமா இருக்கனும். வீட்டுக்கு
வெளிய கிடைக்கும் எந்த உணவையும் கொஞ்ச நாளைக்கு சாப்பிடாதிங்க. கூல்ட்ரிங்க்ஸ் எதும் குடிக்காதிங்க. பானிபூரி, சமோசா மைதாவில் தயாராகும் பேக்கரி ஐட்டம்ஸ்
இதெல்லாம் ஆரோக்கியமற்றது. ஸ்டிரிட்டா அவாய்ட் பண்ணிடுங்க. ப்ரட் வித் ஜாம் கூட நல்லதில்ல. ஒயிட் சுகர் எடுத்துக்காதிங்க. தேவைப்பட்டா கொஞ்சமா நாட்டு
சர்க்கரை சேத்துக்கலாம். ஏற்கெனவே நாம் சாப்பிடும் அரிசி போன்ற உணவுகள் எல்லாம் நம்ம உடல்ல சர்க்கரையா தான் சேரும். அதனால நாம தனியா எதும் சர்க்கரை
எடுத்துக்க வேணாம்.” என்றார்.