என்ன பட்டாசு மாதிரி சத்தமா வெடிக்குது! தமிழ்நாட்டின் பல இடங்களில் கொட்டிய ஆலங்கட்டி மழை!

என்ன பட்டாசு மாதிரி சத்தமா வெடிக்குது! தமிழ்நாட்டின் பல இடங்களில் கொட்டிய ஆலங்கட்டி மழை!
என்ன பட்டாசு மாதிரி சத்தமா வெடிக்குது! தமிழ்நாட்டின் பல இடங்களில் கொட்டிய ஆலங்கட்டி மழை!
Published on

சமீப நாட்களாக அதிக வெப்பம் நிலவி வந்த நிலையில் குளிர்விக்கும் விதமாக, கடந்த சில நாட்களாக தமிழ் நாட்டில் ஆங்காங்கே பரவலாக மழை பெய்து வருவதுடன், ஆங்காங்கே ஆலங்கட்டி மழையும் பெய்து வருகிறது. இதனால், மக்கள் மகிழ்சியடைந்து உள்ளனர்.

செய்யாறு அருகே கொட்டிய ஆலங்கட்டி மழை

திருவண்ணாமலை மாவட்டம் செய்யாறு அருகே கொருக்காத்தூர் சுற்றுவட்டார பகுதிகளில் ஆலங்கட்டி மழை பெய்தது. தீடிரென ஆலங்கட்டி மழை பெய்ததால் பொதுமக்கள் வெளியில் வராமல் வீடுகளுக்கு உள்ளே நின்று ஆலங்கட்டி மழையை வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்தனர். கோடை மழையால் குளிர்ச்சியான சூழல் நிலவி வருகிறது.

நெய்வேலி டவுன்ஷிப் பகுதியில் திடீரென பெய்த ஆலங்கட்டி மழை!

கடலூர் மாவட்டம் நெய்வேலி டவுன்ஷிப் பகுதிகளில் கடுமையான வெப்பத்தாக்கத்தால் பொதுமக்கள் அவதி அடைந்து வந்த நிலையில், இன்று மாலை திடீரென ஆலங்கட்டி மழை சிறிது நேரம் பெய்தது. பொதுமக்கள் மகிழ்ச்சியுடன் ஐஸ் கட்டிகளை எடுத்து சேமித்தனர். சிறுவர்கள், சிறுமிகள் ஆலங்கட்டி மழையை கண்டு ரசித்தோடு அதில் விளையாடவும் செய்தனர்.

அரியலூர் - 11 ஆண்டுகளுக்கு பிறகு ஆலங்கட்டி மழை

அரியலூர் நகர் பகுதியில் ஞாயிற்றுக்கிழமை மாலை 7 மணியளவில் மிகுந்த சத்தத்துடன்‌ ஆலங்கட்டி கன மழை பெய்தது. இந்த ஆலங்கட்டி மழை வானத்தில் இருந்து கல் விழுவது போல் இருந்ததாக மக்கள் தெரிவிக்கின்றனர். இதனையடுத்து, மழை நின்றதும் வெளியே சென்று பொது மக்களுக்கு ஒரு இன்ப அதிர்ச்சி காத்திருந்தது. வெள்ளை நிறத்தில் 5 கிலோவிற்கும் அதிக எடைக்கொண்ட பனி பாறை ஒன்று விழுந்திருந்தது தெரிந்தது. அரியலூரில் கடந்த 2012 ஆம் ஆண்டிற்கு பிறகு ஆலங்கட்டி மழை பெய்ததால், இதனை பொது மக்கள் மகிழ்ச்சியுடன் தங்களது செல்போனில் ஸ்டேட்டஸ் வைத்தனர்.

ஆலங்கட்டி மழையா- பாரங்கல் மழையா? ஆச்சரியத்தில் உறைந்த வேலூர் மக்கள்

வேலூர் மாவட்டம் குடியாத்தம் மற்றும் சுற்று வட்டார பகுதிகளில் நேற்று நள்ளிரவு பலத்த காற்றுடன் கூடிய ஆலங்கட்டி மழையால் ஏராளமான மரங்கள் மற்றும் மின்கம்பங்கள் சாய்ந்தன. இதனிடையே குடியாத்தம் அடுத்த பாக்கம் கிராமத்தில் அதிக சத்தத்துடன் பெய்துள்ளது. காலையில் பார்த்த கிராம மக்கள் பாறாங்கல் போன்ற ஆலங்கட்டிகள் இருந்ததை கண்டு அதிர்ச்சியுடனும் ஆச்சரியத்துடன் பார்த்தனர். இதுவரை இது போன்ற ஆலங்கட்டி மழையை பார்த்ததில்லை என அந்த கிராமவாசிகள் ஆச்சிரியத்துடன் தெரிவித்தனர் தற்போது அந்த படங்கள் வலைதளங்களில் வேகமாக பகிரப்பட்டு வருகிறது.

திருச்சி - ஆலங்கட்டிகளை கையில் எடுத்து மகிழ்ந்த மக்கள்

திருச்சி மாவட்டம், மண்ணச்சநல்லூர் சுற்றுவட்டார கிராம பகுதிகளான குமரக்குடி, நொச்சியம், திருவாசி உள்ளிட்ட பல்வேறு கிராமங்களில் நேற்று (ஞாயிற்றுகிழமை) மாலை திடீரென சூறாவளி காற்றுடன் கனமழை பெய்ய தொடங்கியது. மழை பெய்யத்தொடங்கியது சிறிது நேரத்தில் திடீரென ஆலங்கட்டி மழை பெய்தது. இதனைக் கண்ட கிராம மக்கள் பெரும் மகிழ்ச்சியில் ஆழ்ந்தனர். தரையில் விழுந்த முத்து போன்று இருந்த ஆலங்கட்டியை கையில் எடுத்து பார்த்து உற்சாகமடைந்தும் தங்களது செல்போனில் வீடியோ எடுத்தும் மகிழ்ந்தனர். தொடர்ந்து ஒரு மணி நேரத்திற்கு மேலாக பெய்த ஆலங்கட்டி மழையால் பல கிராமங்களை சேர்ந்த மக்கள் சந்தோஷமடைந்தனர்.

வேலூர், கடலூர் மற்றும் கும்பகோணம் ,திருநாகேஸ்வரம், மற்றும் அதனை சுற்றி உள்ள பகுதிகளில் திடீரென ஆலங்கட்டி மழையும் அதைத்தொடர்ந்து கனமழையும் பெய்து நிலத்தை குளிர்வித்து வருகிறது.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com