”ஒன்றிய அரசின் நியூட்ரினோ திட்டத்தை தமிழ்நாடு அரசு முறியடிக்க வேண்டும்” : சீமான்

”ஒன்றிய அரசின் நியூட்ரினோ திட்டத்தை தமிழ்நாடு அரசு முறியடிக்க வேண்டும்” : சீமான்
”ஒன்றிய அரசின் நியூட்ரினோ திட்டத்தை தமிழ்நாடு அரசு முறியடிக்க வேண்டும்” : சீமான்
Published on

”மேற்குத்தொடர்ச்சி மலையைச் சீர்குலைக்கும் ஒன்றிய அரசின் நியூட்ரினோ ஆய்வு எனும் நாசகாரத்திட்டத்தை தமிழ்நாடு அரசு தடுத்து முறியடிக்க வேண்டும்” என்று நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் வலியுறுத்தியுள்ளார். இன்று தனது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ள அறிக்கையில்,

மேற்குத்தொடர்ச்சி மலையைச் சீர்குலைக்கும் நாசகாரத் திட்டமான நியூட்ரினோ ஆய்வுத்திட்டம் பொதுமக்கள் மற்றும் சுற்றுச்சூழல் ஆர்வலர்களின் கடும் எதிர்ப்பினால் நிறுத்தப்பட்ட நிலையில், தற்போது மீண்டும் அதனைச் செயல்படுத்த முனைகிற கொடுஞ்செய்தியறிந்து அதிர்ச்சியடைந்தேன். பல்லுயிர்ப்பெருக்க மண்டலமாக விளங்கக்கூடிய மேற்குத்தொடர்ச்சி மலையில் இயற்கையைப் பாதிக்கக்கூடிய எதுவொன்றையும் செயல்படுத்தக்கூடாதென ஐயா கஸ்தூரி ரங்கன் தலைமையிலான குழுவினர் அறிவுறுத்தி எச்சரித்திருக்கும் நிலையில், அங்கு நியூட்ரினோ ஆய்வுக்கூடத்தை அமைக்க முனைவது வன்மையான கண்டனத்திற்குரியது.

நியூட்ரினோ ஆய்வுத்திட்டத்துக்காக மலை உச்சியிலிருந்து பல கிலோ மீட்டர் தூரத்துக்குச் சுரங்கப் பாதைகள் அமைக்கப்படும். இதற்காகப் பாறைகளைப் பிளக்கும் தொழில்நுட்பங்களாலும், வெடிமருந்துப் பொருட்களின் பயன்பாட்டாலும், கதிர்வீச்சுப்பொருட்களின் கலப்பாலும் நிலம், நீர், தாவரங்கள், வன உயிரினங்கள் தொடங்கி அத்தனையும் அழியக்கூடும். மேலும், மலைப்பாறைகள் வெடிவைத்துத் தகர்க்கப்பட்டால் எழும் தூசு மண்டலம் காற்றினை மிகப்பெரிய அளவில் மாசுபடுத்தும். இதற்கு முன்னர், நியூட்ரினோ ஆய்வு நடந்த பல நாடுகளில் அணுக்கதிர் வீச்சு அபாயங்கள் நிகழ்ந்துள்ளது. இதனை உணர்ந்தே, சுற்றுச்சூழல் ஆர்வலர்கள், வேளாண் பெருங்குடி மக்கள், பொதுமக்கள் எனப் பலரும் தீவிரமாக அந்தத் திட்டத்தை எதிர்த்துப் போராடி வருகின்றனர். எனினும், அவர்களின் எதிர்ப்பையும் மீறி, நியூட்ரினோ ஆய்வு மையத் திட்டத்துக்கு ஒப்புதல் அளித்தது ஒன்றிய அரசு. நியூட்ரினோ ஆய்வு கதிர்வீச்சினால் மனிதர்கள் மட்டுமின்றி, அங்குள்ள காடுகளுக்கும், அதில் வாழும் அனைத்து உயிரினங்களுக்கும் மிகப்பெரிய பாதிப்பை ஏற்படுத்தி, பல்லுயிர்ப்பெருக்கத்தை முற்றாக அழித்தொழிக்க வாய்ப்பிருப்பதாகச் சூழியல் ஆர்வலர்கள் அச்சம் தெரிவிக்கின்றனர்.

மேற்குத்தொடர்ச்சி மலைப்பகுதியில் அமைந்துள்ள உடும்பஞ்சோலை மலைப்பகுதியானது பாதுகாக்கப்பட்ட வனப்பகுதி எனக் கடந்த 1987 ஆம் ஆண்டு அறிவிக்கப்பட்டு, சுற்றுச்சூழலைப் பாதிக்கும் எவ்விதத் தொழிற்சாலைகளும் தொடங்குவதற்குத் தடை விதிக்கப்பட்டிருந்த நிலையில், அதனைத் தகர்க்கும் வகையில் அப்பகுதி பாதுகாக்கப்பட்ட வனப்பகுதியல்ல எனக் கடந்த ஜனவரி மாதம் ஒன்றிய அரசு அறிவித்தது. மதிகெட்டான் சோலை தேசிய பூங்கா இருக்கும் பகுதி பாதுகாக்கப்பட்ட வனப்பகுதி அல்ல என்று அறிவிக்கப்பட்டு இருப்பதால், தேசிய வன உயிர் வாரியம் நியூட்ரினோ திட்டத்திற்கு அனுமதி வழங்க வாய்ப்பு ஏற்பட்டுள்ளது. அவ்வாறு அனுமதிப்பெறப்பட்டு நியூட்ரினோ திட்டம் செயல்படுத்தப்பட்டால் அது தமிழகத்திற்கு இயற்கை அரணாய் விளங்கும் மேற்குத்தொடர்ச்சி மலையைச் சிதைப்பதுடன், சுற்றுச்சூழலைச் சீர்கெடுத்து, பருவ மழைப்பொழிவிலும் கடுமையான பாதிப்பை ஏற்படுத்தும் என்பதாலேயே தொடக்கத்திலிருந்தே இத்திட்டத்தினை எதிர்த்து வருகிறோம்.

2018 ஆம் ஆண்டு தேசிய பசுமைத்தீர்ப்பாயம் அளித்த தீர்ப்பில் நியூட்ரினோ திட்டத்தை தேசிய வனவுயிர் வாரிய அனுமதி இல்லாமல் தொடங்கக்கூடாது என உத்தரவிடப்பட்டிருந்தது. இதற்காக டாட்டா அடிப்படை ஆராய்ச்சி கழகம் (Tata Institute of Fundamental Research – TIFR), வனவுயிர் வாரிய அனுமதி கோரி விண்ணப்பம் செய்தபோது, கேரள மாநில அரசு TIFR கோரிக்கையை நிராகரித்தது. இதனால், வனவுயிர் வாரிய அனுமதியை அப்போது பெறமுடியாமல் போனது. இந்நிலையில், கடந்த மே 20-ம் தேதியன்று நியூட்ரினோ திட்டத்துக்குக் காட்டுயிர் வாரிய அனுமதி கேட்டு தமிழக வனத்துறையிடம் டாடா ஆராய்ச்சி நிறுவனம் விண்ணப்பித்துள்ளது. இதனை தமிழக வனத்துறை உடனடியாக நிராகரிக்க வேண்டும். இத்தோடு, நியூட்ரினோ திட்டம் தொடர்பாக உச்சநீதிமன்றத்தில் நிலுவையிலுள்ள வழக்கிலும் முனைப்போடு செயல்பட்டு, இத்திட்டத்தினைச் செயல்படுத்த முனையும் ஒன்றிய அரசின் முயற்சியைத் தடுக்க வேண்டுமெனக் கோருகிறேன்.

ஆகவே, மேற்குத்தொடர்ச்சி மலையைப் பாழ்படுத்தும் நியூட்ரினோ திட்டம் செயல்படுத்தப்படுவதை உடனடியாகக் கைவிடுவதற்குச் சட்டப்பூர்வமாகவும், அரசியல் ரீதியாகவும், ஜனநாயக வழிமுறைகளின் வாயிலாகவும் ஒன்றிய அரசுக்கு தமிழ்நாடு அரசு அழுத்தம் கொடுத்து, இத்திட்டத்தை முறியடிக்க வேண்டுமென நாம் தமிழர் கட்சி சார்பாக வலியுறுத்துகிறேன்” என்று தனது ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்திருக்கிறார்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com