காடுகளை அழிக்கும் வனப் பாதுகாப்புச் சட்டத்தை திரும்பப்பெற வேண்டுமென பூவுலகின் நண்பர்கள் ஒன்றிய அரசுக்கு கோரிக்கை வைத்துள்ளனர் அதைப்பற்றி விரிவாக இங்கே பார்க்கலாம்.
ஒன்றிய அரசின் சுற்றுச்சூழல் வனம் மற்றும் காலநிலை மாற்றத்திற்கான அமைச்சகம், கடந்த அக்டோபர் 4ஆம் தேதி இந்தியாவில் 1980-ஆம் ஆண்டு இயற்றப்பட்ட வனப்பாதுகாப்புச் சட்டத்தை திருத்துவதற்கான முன்மொழிவுகள் அடங்கிய ஆவணமொன்றை வெளியிட்டுள்ளது.
இந்த ஆவணத்தில் கூறப்பட்டுள்ள முடிவுகள் மீதான கருத்துகளை தெரிவிக்க விரும்புபவர்கள் fca.amendment@gov.in என்கிற அஞ்சல் முகவரிக்கு 15 நாட்களுக்குள் தங்கள் கருத்துக்களை தெரிவிக்க வேண்டும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
காடு என்கிற வரையறைக்குள் வருகின்ற பகுதிகள் அனைத்திலும் காடு சாராத திட்டங்கள் அதாவது நெடுஞ்சாலைகள் அமைப்பது, சுரங்கங்கள் அமைப்பது, அணைகள் கட்டுவது போன்ற நடவடிக்கைகளை மேற்கொள்ளும் போது, தேவைக்கு அதிகமாகவோ அல்லது தேவையில்லாமல் காடு அழிக்கப்படுவதை தடுக்கும் நோக்கத்தில் உருவாக்கப்பட்டதுதான் வனப் பாதுகாப்புச் சட்டம்.
இச்சட்டத்தில் ஒன்றிய அரசு சில திருத்தங்களை மேற்கொள்ள முயன்று வருகிறது. சட்டத் திருத்தங்கள் அடங்கிய ஒரு மசோதாவை தயாரிப்பதற்கு முன்னர் ஒன்றிய அரசு இச்சட்டத்தில் மேற்கொள்ள நினைக்கும் 14 திருத்தங்கள், சட்ட விலக்குகள் குறித்த முழுமை அல்லாத ஒரு ஆவணத்தை தற்போது வெளியிட்டு அதன்மீது கருத்துகளைக் கோரியுள்ளது.
காடு மற்றும் காட்டு வளங்களை பாதிக்கக்கூடிய பல்வேறு அம்சங்கள் இந்த திருத்த ஆவணத்தில் இடம் பெற்றிருந்தாலும் கூட அனைத்து தரப்பு மக்களும் சட்டம் இயற்றுதலில் பங்கெடுக்கும் அடிப்படை ஜனநாயக உரிமை கூட இந்த கருத்துக் கேட்பு அறிவிப்பில் இல்லை என்பதே இதை எதிர்ப்பதற்கான முதற்காரணமாக அமைந்துள்ளது.
இந்த சட்டத்திருத்தம் குறித்த ஆவணத்தை ஆங்கில மொழியில் மட்டுமே ஒன்றிய அரசு வெளியிட்டுள்ளது. இதனை அரசியலமைப்புச் சட்டத்தின் எட்டாவது அட்டவணையில் உள்ள 22 மொழிகளிலும் வெளியிட்டிருக்க வேண்டும். வரைவு சுற்றுச்சூழல் தாக்க மதிப்பீட்டு அறிவிக்கை 2020 ஆங்கிலம் மற்றும் இந்தி மொழியில் மட்டுமே வெளியிட்டபோது பல மாநில உயர் நீதிமன்றங்களில் அதற்கு எதிராக வழக்கு தொடரப்பட்டது.
இந்த அறிவிப்பானது பொது விடுமுறை நாளான அக்டோபர் 2 சனிக்கிழமை வெளியிடப்பட்டுள்ளது. இது முற்றிலும் தவறான நடவடிக்கையாகும். இந்தியா முழுவதுமுள்ள காடு மற்றும் காடு சார்ந்து வாழும் மக்களிடையே பெரும் தாக்கம் ஏற்படுத்தக்கூடிய ஒரு சட்டத் திருத்தம் குறித்த ஆவணத்தின் மீது கருத்து தெரிவிக்க 2 மாதங்களாவது கால அவகாசம் வழங்க வேண்டும். எனவே இந்த ஆவணத்தை தமிழ் உள்ளிட்ட 22 மொழிகளில் மொழி பெயர்த்து கருத்து தெரிவிக்க போதுமான கால அவகாசம் வழங்க வேண்டும்.
ஒன்றிய அரசு வனப் பாதுகாப்புச் சட்டத்தில் திருத்தம் கொண்டு வர நினைக்கும் பல்வேறு விஷயங்களில் நம்மை மிகவும் கவலைக்குள்ளாக்கிய விஷயம் என்னவென்றால் தேச முக்கியத்துவம் வாய்ந்த மற்றும் நாட்டின் பாதுகாப்பு மற்றும் ராணுவம் சார்ந்த திட்டங்களுக்கு வனப் பாதுகாப்புச் சட்டத்தின் கீழ் முன் அனுமதி பெறுவதிலிருந்து விலக்களிப்பது குறித்த அம்சங்கள் இடம்பெற்றிருப்பது தான். ஒன்றிய அரசானது வணிக லாபத்திற்காக சாகர்மாலா திட்டத்தின்கீழ் பல்வேறு துறைமுகங்கள் அமைப்பது பாரத்மாலா பரியோஜனா திட்டத்தின்கீழ் நெடுஞ்சாலைகள் அமைப்பது உள்ளிட்ட திட்டங்களைக் கூட Strategic and security projects of national importance வரையறைக்குள் கொண்டு வருகிறது.
தேனி மாவட்டத்தில் அமைக்க திட்டமிடப்பட்டுள்ள நியூட்ரினோ ஆய்வகத்தை தேச முக்கியத்துவம் வாய்ந்த திட்டமாக அறிவித்துத்தான் மாநில அரசால் சுற்றுச்சூழல் அனுமதி மறுக்கப்பட்ட பின்னரும்கூட ஒன்றிய அரசால் அதற்கான சுற்றுச்சூழல் அனுமதி வழங்கப்பட்டது. இப்படியான திட்டங்களை தேச முக்கியத்துவம் என்கிற பெயரில் செயல்படுத்துவது காடுகள் பெரியளவில் அழிக்கப்படுவதற்கு காரணமாகிவிடும்.
தமிழ் நாட்டில் உள்ள காப்புக் காடுகள் மற்றும் புலிகள், யானைகள் போன்ற சரணாலயங்களில் பல ஹெக்டேர் பரப்பளவில் தனியாருக்குச் சொந்தமான காடுகள் உள்ளன. இவற்றை வனப் பாதுகாப்புச் சட்டத்திலிருந்து விலக்கினால் வணிக நோக்கில் அந்த இடங்களில் பணப்பயிர்கள் விதைக்கப்பட்டு மரங்கள் வெட்டப்படும். ஒரு காப்புக்காட்டிற்கு நடுவிலோ, அதை ஒட்டியோ உள்ள தனியார் காட்டில் இப்படி மரங்கள் வெட்டப்பட்டால் அங்கு பெரியளவில் மண் அரிப்பு ஏற்படும். மழைக்காலங்களில் இந்த மண் அரிப்பினால் காப்புக் காடுகளின் சூழல்தன்மை பாதிக்கப்படும் வாய்ப்புள்ளது.
வனப் பாதுகாப்புச் சட்டம் 1980 அமலுக்கு வருவதற்கு முன்பாக நெடுஞ்சாலை மற்றும் ரயில்வே போன்ற அரசுத் துறைகளால் கையகப்படுத்தப்பட்ட வனப்பகுதிகளில் மேற்கொள்ளப்படும் திட்டங்களுக்கு இச்சட்டத்தின் விதிகளிலிருந்து விலக்களிக்கவும் ஒன்றிய அரசு முடிவு செய்துள்ளது. இந்த நடவடிக்கையால் புதிய சாலைகளும், ரயில்வே பாதைகளும் காப்புக் காடுகளில் அமைக்கப்பட்டால் பெரிய அளவிலான காடுகள் சிறு சிறு துண்டுகளாக மாறிவிடும். காட்டுயிர்கள் வாழ்விடங்கள் இதனால் சுருக்கப்படும் மேலும் மனித – விலங்கு மோதல் சம்பவங்கள் அதிகரிக்கும் அபாயம் உள்ளது.
அடுத்ததாக Extended Reach Drilling எனும் தொழில்நுட்பத்திற்கான அனுமதி குறித்து இந்த ஆவணத்தில் விவாதிக்கப்பட்டுள்ளது. காடுகளுக்கு அடியில் பல ஆயிரம் அடி ஆழத்தில் இருக்கும் இயற்கை எரிவாயு மற்றும் எண்ணெய் வளங்களை காடு என்பதற்கான சட்ட வரையறைக்குள் வராத ஒரு இடத்திலிருந்து துளையிட்டுச் சென்று அவ்வளங்களை எடுப்பதுதான் இந்த தொழில்நுட்பத்தின் அடிப்படை. இந்த தொழில்நுட்பத்தால் காட்டின் இயற்கையான இயங்கியல் தன்மை முற்றிலுமாக பாதிக்கப்படும்.
தனியார் காடுகளாக வரையறுக்கப்பட்டுள்ள பகுதிகளில் 250 சதுர மீட்டர் அளவில் கட்டிடங்களை எழுப்பிக்கொள்ள நில உரிமையாளர்களுக்கு ஒரே ஒருமுறை மட்டும் அனுமதி வழங்குவது குறித்து இந்த ஆவணத்தில் கூறப்பட்டுள்ளது. இதன் நோக்கம் என்பது வணிக நோக்கில் தோட்டப்பயிர் உற்பத்தியை ஊக்குவிப்பதைத் தாண்டி வேறெதுவுமில்லை. இது கூடுதலாக காட்டின் நிலைத்தன்மை சீர்குலைய காரணமாகிவிடும்.
இந்தியாவின் முதன்மை பணக்காரரான அம்பானியின் ரிலையன்ஸ் நிறுவனம் இந்தியாவில் 2019 முதல் சில தனியார் வன உயிரியல் பூங்காக்களை அமைக்கத் தொடங்கியுள்ளதும், 2020ஆம் ஆண்டு ஒன்றிய சுற்றுச்சூழல் மற்றும் வனத்துறையானது நாட்டிலுள்ள 160 வன உயிரியல் பூங்காக்களை மேம்படுத்துவதற்கு தனியாருடன் சேர்ந்து ஒப்பந்தமிட முடிவு செய்ததையும் நாம் இங்கு தொடர்புபடுத்த வேண்டியுள்ளது.
ஐக்கிய நாடுகள் சபையானது 2021 தொடங்கி அடுத்த பத்தாண்டுகளை கால நிலை மாற்றத்தின் தாக்கத்திலிருந்து நம்மை நாம் பாதுகாத்துக் கொள்ள, மேற்கொள்ள வேண்டிய அத்தனை மாற்றங்களையும் செய்வதற்கான பத்தாண்டாக அறிவித்துள்ளது. மனித பேராசை நடவடிக்கைகளால் காடுகள் பெரிய அளவில் அழிக்கப்பட்டு வருகிறது. என்ன விலை கொடுத்தாவது அதைத் தடுக்க வேண்டிய கட்டாயத்தில் தற்போது நாம் வாழ்ந்து கொண்டிருக்கிறோம். அதற்கான நடவடிக்கைகளை விட்டு காடழிப்பிற்கு வித்திடும் வகையில் சட்டத் திருத்தங்களை கொண்டு வர ஒன்றிய அரசு முடிவு செய்துள்ளது கண்டனத்திற்குரியது.