ஆர்க்கிமிடிஸ் விதியைப் பயன்படுத்தி யானை பள்ளத்தில் இருந்து மீட்கப்பட்ட வீடியோ வெளியாகியுள்ளது.
மேற்கு வங்காள மாநிலத்தின் மிதினாபுரத்தில் நள்ளிரவு 1 மணியளவில் யானை ஒன்று பள்ளத்தில் விழுந்து, வெளியே வரமுடியாமல் பரிதவித்து வந்தது. இதனையறிந்த வனத்துறையினர் அங்கு விரைந்து சென்று யானையை மீட்கும் முயற்சியில் ஈடுபட்டனர். அதன்பின் அதிகாலை 4 மணியளவில் மீட்புப் பணி வெற்றிகரமாக நிறைவடைந்து யானை பத்திரமாக மீட்கப்பட்டது.
பள்ளத்தில் விழுந்த இந்த யானையை ஆர்க்கிமிடிஸ் இயற்பியல் விதியைப் பயன்படுத்தி பாதுகாப்பாக மீட்டிருப்பதாக ஐ.ஃஎப்.எஸ் அதிகாரி பர்வீன் கஸ்வான், தனது ட்விட்டர் பக்கத்தில் வீடியோ வெளியிட்டு தெரிவித்துள்ளார்.
ஆர்க்கிமிடிஸ் விதி என்பது, மிதக்கும் ஒரு பொருளின் எடை, அப்பொருளால் வெளியேற்றப்பட்ட திரவத்தின் எடைக்குச் சமமாக இருக்கும் என்பதாகும். இந்த விதியைக் கொண்டு வனத்துறையினர் பள்ளத்தில் நீரைப் பாய்ச்சியுள்ளனர். அதோடு பள்ளத்தில் உள்ள யானை எளிமையாக வெளியேறுவதற்கு ஏதுவாகச் சறுக்கலான ஒரு பாதை வளைவையும் ஏற்படுத்தியுள்ளனர். பள்ளத்தினுள் நீர் செலுத்த, செலுத்த யானை மேலே மிதக்கத் தொடங்கியுள்ளது. இதையடுத்து மிதந்துக் கொண்டிருந்த அந்த யானை சறுக்கலாக அமைக்கப்பட்ட பாதை வளைவின் வழியாக ஏறி மேலே வந்துள்ளது. இதனால் அந்த யானைக்கு எந்தக் காயமும் ஏற்படவில்லை. அதோடு வனத்துறை அதிகாரிகளுக்குப் பெரிய அளவிலான சிரமம் இல்லாமல் 3 மணி நேரத்தில் யானையை மீட்டுள்ளனர்.
யானை மீட்கப்பட்ட வீடியோவை பலரும் சமூக வலைதளங்களில் பகிர்ந்து வனத்துறையினரை பாராட்டி வருகின்றனர்.
இதையும் படிக்க: கீட்டோ டயட் முறையை பின்பற்றுபவரா நீங்கள்? - இந்த தவறுகளை நிச்சயம் தவிர்த்துவிடுங்கள்!