Eco India: காலிபாட்டில்களுக்கு காசா?.. நெகிழி பாட்டில்களுக்கு இப்படியும் ஓர் தீர்வு!

Eco India: காலிபாட்டில்களுக்கு காசா?.. நெகிழி பாட்டில்களுக்கு இப்படியும் ஓர் தீர்வு!
Eco India: காலிபாட்டில்களுக்கு காசா?.. நெகிழி பாட்டில்களுக்கு இப்படியும் ஓர் தீர்வு!
Published on

புதிய தலைமுறை டி டபுள்யூ எனும் புகழ்பெற்ற ஜெர்மானிய தொலைக்காட்சியுடன் இணைந்து வழங்கும், பச்சைப்பூமிக்கு பாத்தி கட்டும் காட்சி ஆவணம் ‘’ஈகோ இந்தியா’’(Eco India). இந்தியா உள்ளிட்ட உலகின் பல பகுதிகளுக்குச் சென்று சுற்றுச்சூழல் நிலவரத்தை நேரிடையாக ஆய்ந்து காட்சிப்படுத்தியிருக்கிறது ஈகோ இந்தியா (Eco India). இந்த நிகழ்ச்சி தனிமனிதன் முதல் அரசு வரை அனைவருக்கும் உள்ள பொறுப்பை உணர்த்துகிறது. மட்டுமின்றி சுற்றுச் சூழலை மீட்டெடுக்க முயலும் பசுமைப்போராளிகளை அடையாளம் கண்டு உலகிற்குச் சொல்கிறது.

உலகை மாசுப்படுத்தும் மோசமான காரணிகளில் ஒன்று பிளாஸ்டி பாட்டில்கள். ஆனால், உலகம் முழுக்க நாள் ஒன்றுக்கு சுமார் 150 கோடி பாட்டில்கள் விற்பனையாகின்றன. அவற்றை ஒழிப்பதற்கு அனைத்து நாடுகளுமே போராடுகின்றன. அச்சத்தை ஏற்படுத்தும் பாட்டில்கள் இந்த பூமிப்பந்தில் பேரழிவை ஏற்படுத்தும் அடையாளமாகத் திகழ்கின்றன. இந்த பிரச்னையைத் தீர்க்க ஜெர்மனி ஒரு திட்டத்தை பின்பற்றுகிறது.

இந்த திட்டத்துக்குப் ஃபண்ட் என்று பெயர் வைத்திருக்கிறார்கள். ஃபண்ட் என்பது பழைய கண்ணாடி, பிளாஸ்டிக் பாட்டில்களை குப்பையில் போடாமல் அப்படியே திருப்பித் தருபவர்களுக்கு பணம் கொடுக்கும் திட்டம்தான் அது. சூழலை மாசுபடுத்தும் நெகிழி மற்றும் கண்ணாடிகளை தடுப்பதற்காகவே ஜெர்மனி அரசு வைப்புத்தொகை ஒன்றை திருப்பியளிக்கும் திட்டத்தை 2003ஆம் ஆண்டு அறிமுகப்படுத்தியது. இந்தத் திட்டம் ஊக்கத்தொகை என்ற அடிப்படையில் சுற்றுச்சூழலுக்கு ஆதரவாக சந்தையில் ஒரு மாற்றம் ஏற்படுத்தும் நோக்கத்தைக் கொண்டு இயங்குகிறது.

இந்த திட்டம் எப்படி இயங்குகிறது?

உற்பத்தியாளர்கள் பானத்துடன் பாட்டிலுக்குமான விலையையும் சேர்த்தே விற்பனை செய்கின்றர். பின்னர் பயன்படுத்திய பாட்டில்கள் கடைகளுக்கோ அல்லது நாட்டில் அமைக்கப்பட்டுள்ள 48000 திரும்பபெறும் எந்திரங்களுக்கோ திருப்பி அனுப்பப்படுகின்றன. அதாவது 25 பாட்டில்களுக்கு மூணரை யூரோ திரும்பக் கிடைக்கிறது. இந்த சிறியத் தொகைக்காகவே பெரும்பாலான மக்கள் இதை பின்பற்றுகின்றனர். இப்படியாக திரும்ப்பெறும் பாட்டில்களில் 40 விழுக்காடு மறுபயன்பாட்டுக்கு உள்ளாகின்றன. அவை சுத்தம் செய்யப்பட்டு பானங்கள் நிரப்பப்பட்டு மீண்டும் சந்தைக்கு வருகின்றன. சில நெகிழி பாட்டில்கள் இருபது முறையும் சில கண்ணாடி பாட்டில்கள் ஐம்பது முறையும் ஜெர்மனியில் மறு பயன்பாடு செய்யப்படுகின்றன. இதுபோக ஒருமுறை பயன்படுத்தப்படும் பாட்டில்களுக்கான வைப்புத்தொகை இரட்டிப்பாகப் படுகிறது.

ஜெர்மனியின் இந்த திட்டம் வெற்றிகரமானதாக இருக்க மிக முக்கியக் காரணம் பாட்டில்களுக்கான பணத்தைத் திரும்ப்பெறும் இயந்திரம், கடைகள் அல்லது சூப்பர் மார்கெட்டுக்கு அருகிலேயே அமைந்திருப்பதுதான். சில்லறை விற்பனையாளர்கள் இதன்மூலம் வருவாய் ஈட்ட ஏதுவாகிறது. மேலும், திரும்பப்பெற்ற பாட்டில்களின் தன்மைக்கு ஏற்றவாறு அவற்றை தாங்களே மறுசுழற்சிசெய்வதா? அல்லது மறுசுழற்சிக்கு அனுப்புவதா? இதில் எது தங்களுக்கு லாபகரமானது? என்பதையும் அவர்களே தீர்மானிக்கிறார்கள். ஜெர்மனியின் தெருக்கள் சுத்தமாக இருக்கக் காரணம், நடைமுறையில் இருக்கும் டெபாசிட் முறையின் வெற்றிதான். ஆனால் இந்த டெபாசிட் முறை பசுமைத்திட்டத்தை நோக்கிய குறிக்கோளுடன் செல்கிறதா? என்பது கேள்விக்குறியாக உள்ளது.

2003 முதல் சந்தையில் மறுபயன்பாட்டிற்கான பாட்டில்களின் பங்கு கணிசமான அளவு குறைந்துவிட்டது. இதற்கு சூப்பர்மார்க்கெட் ஜாம்பவான்கள் முக்கிய காரணமாக இருக்கின்றனர். ஜெர்மனி உள்ளிட்ட உலகின் வடக்குப் பகுதியிலுள்ள நாடுகள் இன்றளவும் தெற்கத்திய நாடுகளைவிட அதிக பாட்டில் கழிவுகளை உற்பத்திசெய்கின்றன. அதனால் பசுமைச்சூழலுக்கான தீர்வு பலமுறைபடுத்தும் முறைக்கு மாறுதல் மற்றும் மறுசுழற்சி செய்வதை முறைப்படுத்துதல் என்பதுதான். ஜெர்மனியின் இந்த டெபாசிட் திட்டம் போல இந்தியா போன்ற மற்ற நாடுகளிலும் ஒரு திட்டத்தைக் கொண்டுவந்தால் பிளாஸ்டிக் குப்பைகள் குறையும் என்பதில் சந்தேகமில்லை.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com