Eco India: மரங்களின் தண்ணீர் தேவைகளுக்கு பெர்லின் நகர மக்கள் காட்டும் வழி!
புதிய தலைமுறை டி டபுள்யூ எனும் புகழ்பெற்ற ஜெர்மானிய தொலைக்காட்சியுடன் இணைந்து வழங்கும், பச்சைப்பூமிக்கு பாத்தி கட்டும் காட்சி ஆவணம் ‘’ஈகோ இந்தியா’’(Eco India). இந்தியா உள்ளிட்ட உலகின் பல பகுதிகளுக்குச் சென்று சுற்றுச்சூழல் நிலவரத்தை நேரிடையாக ஆய்ந்து காட்சிப்படுத்தியிருக்கிறது ஈகோ இந்தியா (Eco India). இந்த நிகழ்ச்சி தனிமனிதன் முதல் அரசு வரை அனைவருக்கும் உள்ள பொறுப்பை உணர்த்துகிறது. மட்டுமின்றி சுற்றுச் சூழலை மீட்டெடுக்க முயலும் பசுமைப்போராளிகளை அடையாளம் கண்டு உலகிற்குச் சொல்கிறது.
மனிதர்களைப் போலவே மரங்களுக்கும் தண்ணீர் தேவைப்படும். ஆனால் இந்த சிந்தனையே இல்லாமல் கான்க்ரீட் சாலைகளுக்கு நடுவே மரங்களை வளர்க்கிறோம். இந்த மரங்களுக்குத் தண்ணீர் எங்கிருந்து கிடைக்கும்? இந்த பிரச்னைக்கு தீர்வுகாண ஜெர்மனி ஒரு திட்டத்தைப் பின்பற்றுகிறது. ஜெர்மனியின் தலைநகர் பெர்லினில் மட்டும் நான்கு லட்சம் மரங்கள் உள்ளன. அந்த மரங்களுக்கு தேவையான அளவு தண்ணீரும் கிடைக்கிறது. பெர்லின் மக்கள் இதை எப்படி சாத்தியமாக்கினார்கள் என்பதை தெரிந்துகொள்ளலாம்.
பெர்லின் நகரில் மூன்று ஆண்டுகளாக இயல்பைவிட குறைவாக மழைப் பொழிந்ததால் பெர்லின் மக்கள் அவதியுற்றனர். மரங்களும் நீரின்றி வாடின. வாரம் ஒன்றிற்கு குறைந்தபட்சம் பத்து கேன் தண்ணீராவது ஒரு மரத்திற்குத் தேவைப்பட்டது. இந்த பிரச்னைக்குத் தீர்வுகாண தன்னார்வலர்கள் பலர் ஆலோசித்தனர். பெர்லின் நகரிலுள்ள மரங்களைக் காக்க ’சிட்டி லேப்’ என்ற தன்னார்வ அமைப்பு உருவாக்கப்பட்டது. எந்தெந்த மரங்களுக்கு எவ்வளவு தண்ணீர் தேவை என்பதை இந்த அமைப்பின் வலைதளம் அடையாளப்படுத்துகிறது. புதுமைகளை விரும்பும் ஜெர்மனி, தனது நகரங்களின் நிலையான வளர்ச்சியைப் பேணுவதை அடிப்படையாக கொண்டுள்ளது. அப்படித்தான் பெர்லினை மையமாக கொண்டு சிட்டி லேப் என்ற லாபநோக்கற்ற அமைப்பு செயல்படுகிறது. தினசரி வானிலையை அடிப்படையாகக் கொண்டு நகர நிர்வாகம் தரும் தகவல்களின் பேரில் மரங்களுக்கான தண்ணீர் தேவை அறியப்படுகிறது.
இதற்காகவே பிரத்யேகமாக உருவாக்கப்பட்ட வரைபடத்தில் பெர்லினில் உள்ள 6,25,000 மரங்களைப் பற்றிய குறிப்புகள் அடங்கியிருக்கிறது. மரங்கள் இருகிற இடம், அதன் வகை, வயது, தேவையான தண்ணீர் அளவு என்பது போன்ற விபரங்களை அறிய முடியும். இதுதவிர மரத்தின் கிளைகள், உயரம், அகலம் போன்ற இயற்கை ஆர்வலர்களை உற்சாகபடுத்தும் விபரங்களையும் இதில் சேர்க்கவுள்ளனர். இதுவரைக்கும் இந்த வலைத்தளத்தில் 2000 பெர்லின் வாசிகள் இணைந்திருக்கின்றனர. சிலர் நேரமிருக்கும்போது மரங்களுக்கு தண்ணீர் ஊற்றுகின்றனர். சிலர் தங்கள் தெருக்களில் இருக்கும் மரங்களைப் பேணுவதற்கான பொறுப்பேற்கின்றனர். நீர்பாசனப் பணிகள் குறித்த தகவல்களையும் செயலியின்மூலம் தெரிந்துகொள்கிறார்கள். தங்கள் நகரம் போன்றே மற்ற நகரங்களிலும் இதேபோல் மரங்களை பேண்காக்க வேண்டும் என்பதே அவர்களின் விருப்பம் எனத் தெரிவிக்கின்றனர் பெர்லின்வாசிகள்.