தொப்பையை குறைப்பதற்கு பெரும்பாடுபடுபவர்கள் பலர் இருக்கிறார்கள். உடல் எடையைக் குறைக்க தாமாகவே உணவுக்கட்டுப்பாடுகளை எடுத்துக்கொள்வதும் பலரின் வழக்கம். ஆனால், ஒவ்வொருக்குமான உணவுக்கட்டுப்பாட்டு முறைகள் வேறுபடும். அவர்களுக்காக கஸ்டமைஸ்டு டயட் என்ற தனிப்பட்ட உணவுக்கட்டுப்பாடுகளை அறிவுறுத்துகிறார்கள் உணவியல் நிபுணர்கள்.
சாயங்கால நேரத்தில் சுடச்சுட வடை, சமோசாக்கள். விருப்பப்பட்ட நேரத்தில் பிரியாணி, பரோட்டாக்கள் என வெளுத்து வாங்கும்போது தெரியாத உடல் எடை, பத்து நிமிடம் தொடர்ந்து நடக்கும்போது தான் சுமையாகத் தெரியும். அப்படிப்பட்ட நேரத்தில் தங்களுக்குத் தெரிந்த வகையில் டயட் இருப்பதும், பின் கைவிடுவதுமாக இருப்பார்கள் சிலர். ஆனால், ரத்தக்கொதிப்பு, நீரிழிவு, என பலவித பிரச்னைகளில் இருக்கும் ஒவ்வொருவருக்கும் ஒவ்வொருவித டயட் சரியாக இருக்கும் என்று கூறும் டயட்டீஷியன்கள், ஒரேவிதமான டயட்டை அனைவருக்கும் பரிந்துரைக்க முடியாது என்கிறார்கள்.