டெல்லியில் சுற்றுச்சூழல் மாசுபட்டு வரும் நிலையில், காற்றின் தரம் 'மோசம்' என்ற அபாய நிலையை எட்டியுள்ளது.
பஞ்சாப், அரியானா உள்ளிட்ட அண்டை மாநிலங்களில் பயிர்க்கழிவுகள் எரிப்பு உள்ளிட்ட காரணங்களால், தலைநகர் டெல்லியில் சுற்றுச்சூழல் மாசு அதிகரித்து வருகிறது. நிலைமையைச் சமாளிக்க மத்திய அரசும் டெல்லி அரசும் பல்வேறு கட்டுப்பாடுகளை முன்னெடுத்துள்ளது. பட்டாசுகள் விற்கவும் வெடிக்கவும் தடை விதிக்கப்பட்டது. இந்நிலையில் தீபாவளி தினமான நேற்று, காற்றின் தரம் 'மோசம்' என்ற அபாய நிலையை எட்டியது. டெல்லியில் நேற்றிரவு 11 மணி நிலவரப்படி காற்றின் தரக்குறியீடு அதிகபட்சமாக ஆனந்த் விஹார் பகுதியில் 481 அளவுக்கு பதிவாகியிருந்தது. ஐ.டி.ஓ. பகுதியில் 454, இந்திரா காந்தி விமான நிலையம் பகுதியில் 444 என்றும் காற்றின் தரக்குறியீட்டின் அளவு பதிவானதாக, டெல்லி மாசு கட்டுப்பாட்டுக்குழு தெரிவித்துள்ளது. இதனிடையே, தீபாவளி தினமான நேற்று, தடையை மீறி பட்டாசுகளை விற்றதாகவும், வெடித்ததாகவும் 76 பேர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டு கைது செய்யப்பட்டுள்ளனர். 3407 கிலோ பட்டாசுகள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன.