டெல்லியின் காற்று மாசுபாடு காரணமாக 75 சதவீதத்திற்கும் அதிகமான குழந்தைகள் மூச்சுத்திணறல் பிரச்னையை அனுபவிக்கிறார்கள் என எரிசக்தி மற்றும் வள நிறுவனம் (TERI) நடத்திய ஆய்வின் அறிக்கை தெரிவிக்கிறது.
இந்த சுகாதார ஆய்வானது 14 - 17 வயதுக்குட்பட்ட 413 குழந்தைகளிடம் நடத்தப்பட்டது. அதில் 75.4% குழந்தைகளுக்கு மூச்சுத் திணறல், 24.2% குழந்தைகளுக்கு கண்கள் அரிப்பு, 22.3% குழந்தைகளுக்கு வழக்கமான தும்மல் அல்லது மூக்கு ஒழுகுதல் மற்றும் 20.9% குழந்தைகளுக்கு காலையில் இருமல் போன்ற உடல்நல பிரச்னைகள் இருப்பதாக அறியப்பட்டது.
டெல்லியில் உள்ள மாசுபடிந்த காற்றில் PM 2.5 செறிவு மிக அதிகளவில் உள்ளது, இது டெல்லிவாசிகளை குறிப்பாக குழந்தைகளை சுவாச மற்றும் இதய நோய்களை நோக்கித் தள்ளுகிறது என்று இந்த ஆய்வு கூறுகிறது. PM 2.5 இன் மிக ஆபத்தான அங்கமாக கனரக உலோகங்கள் இருப்பதாக ஆராய்ச்சியாளர்கள் அடையாளம் கண்டுள்ளனர், இது மிகுந்த ஆபத்தான சுகாதார விளைவுகளை ஏற்படுத்தக்கூடும். குளிர்காலம் தொடங்கியவுடன், டெல்லியில் காற்றின் தரம் ஒவ்வொரு ஆண்டும் மிகவும் மோசமடைகிறது.
ஆய்வில் பங்கேற்ற நிபுணர்களின் கருத்தின்படி, டெல்லி காற்றில் காட்மியம் மற்றும் ஆர்சனிக் அளவு அதிகரிப்பதால் உள்ளூர் மக்களுக்கு புற்றுநோய், சிறுநீரக பிரச்சனைகள், உயர் இரத்த அழுத்தம், நீரிழிவு மற்றும் இதய நோய்கள் ஏற்படும் அபாயம் உள்ளது என தெரிவிக்கப்பட்டுள்ளது.