கூடலூரில் காயங்களுடன் சுற்றி வந்த காட்டு யானை மயக்க ஊசி செலுத்தாமல் கும்கி யானைகள் உதவியோடு சற்றுமுன் பிடிக்கப்பட்டது.
நீலகிரி மாவட்டம் கூடலூர் சுற்றுவட்டாரப் பகுதிகளில் கடந்த 2 ஆண்டுகளுக்கும் மேலாக காயங்களுடன் சுற்றி வரும் காட்டு யானையை சிகிச்சை அளிப்பதற்காக பிடிக்கும் பணி இன்று காலை துவங்கியது. இதற்காக முதுமலையில் இருந்து விஜய் மற்றும் சுமங்கலா ஆகிய கும்கி யானைகள் கூடலூர் வரவழைக்கப்பட்டன.
இதையடுத்து மதியம் 12 மணி அளவில் கூடலூர் அருகேயுள்ள ஈப்பங்காடு பகுதியில் உள்ள தனியார் தோட்டத்தில் நின்று இருந்த யானைக்கு மயக்க ஊசி செலுத்தாமல் கும்கி யானைகள் உதவியோடு பிடிக்கப்பட்டது. யானைப் பாகன்கள் சாதுர்யமாக செயல்பட்டு யானையின் நான்கு கால்களிலும் கயிறுகளை கட்டினர்.
பின்னர், தயார் நிலையில் இருந்த வன கால்நடை மருத்துவர் ராஜேஷ் யானையின் காயத்திற்கு சிகிச்சை அளித்தார். கால்களில் உள்ள வீக்கம், வலி குறையவும் முதற்கட்ட சிகிச்சை அளிக்கப்பட்டது. தொடர்ந்து யானைக்கு மயக்க ஊசி செலுத்தாமல் கும்கி யானைகள் உதவியோடு லாரியில் ஏற்றி தொடர் சிகிச்சை அளிக்க முதுமலை கொண்டு சென்றனர்.