தமிழகத்தின் தேனி மாவட்டத்தில் நியூட்ரினோ ஆய்வகம் அமைக்கும் திட்டத்தை கைவிடச்செய்ய வேண்டும் என மீண்டும் ஒருமுறை கேட்டுக் கொள்வதாக பிரதமர் மோடிக்கு தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து பிரதமர் மோடிக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கடிதம் ஒன்றை எழுதியுள்ளார். அதில் தேனி மாவட்டம் பொட்டிபுரத்தில் அமையவிருக்கும் நியூட்ரினோ ஆய்வகத்தால் அப்பகுதியின் சுற்றுச்சூழல் மீளாத பாதிப்பிற்கு உள்ளாகும் என முதல்வர் தெரிவித்துள்ளார். உலகின் மிகச்சிறந்த பல்லுயிரின பெருக்க பகுதிகளில் ஒன்றாக கருதப்படும் மேற்குத் தொடர்ச்சி மலைப்பகுதியில் இத்திட்டம் செயல்படுத்தப்படுவதால் அப்பகுதியில் உள்ள தாவர மற்றும் அரிய உயிரினங்களுக்கு பாதிப்பு நேரக்கூடும் என்றும் முதல்வர் தெரிவித்துள்ளார். நியூட்ரினோ ஆய்வகப் பகுதி தேசிய புலிகள் காப்பக பகுதிக்குள் வருவதால் அவ்விலங்குகளை காக்கும் திட்டங்களும் பாதிக்கப்படும் என முதல்வர் தன் கடிதத்தில் தெரிவித்துள்ளார்.
மேலும் மலைக்குள் குடையவேண்டி வரும் என்பதால் பாறை வெடிப்பு, விதானப்பகுதி இடிதல் போன்றவற்றுக்கும் வாய்ப்பிருப்பதாக மாநில அரசின் சூழலியல் தாக்க குழு அறிக்கை அளித்திருப்பதையும் முதல்வர் தன் கடிதத்தில் சுட்டிக்காட்டியுள்ளார். எனவே இத்திட்டத்தை கைவிடுமாறு உரிய துறையினருக்கு பிரதமர் அறிவுறுத்த வேண்டும் என்றும் முதல்வர் கேட்டுக் கொண்டுள்ளார்.