வெப்பத்தின் தாக்கம் அதிகரித்துள்ளதால் மத்திய சுகாதார துறை அமைச்சகம் பொதுமக்களுக்கு சில அறிவுறுத்தலை வழங்கியுள்ளது.
இந்தியாவில் அனைத்து பகுதிகளிலும் கோடை காலத்தின் காரணமாக வெயில் வாட்டி வதக்குகின்றது. குறிப்பாக ராஜஸ்தான், டெல்லி, உத்தரபிரதேசம், மத்திய பிரதேசம், ஹரியானா, சண்டீகர் மற்றும் விதர்பா ஆகிய பகுதிகளில் வெப்பத்தின் தாக்கம் அதிகமாக உள்ளது. நாட்டிலேயே அதிகபட்சமாக ராஜஸ்தான் மாநிலத்தின் சுரு பகுதியில் 50.3 டிகிரி செல்சியஸ் வெப்பம் பதிவானது. இதனால் ஆங்காங்கே வெப்பக்காற்று வீசி வருகிறது.
இந்நிலையில் மத்திய சுகாதார துறை அமைச்சகம் பொது மக்களுக்கு சில அறிவுறுத்தலை வழங்கியுள்ளது. அதில் நாட்டில் வெப்பத்தின் தாக்கம் அதிகமாக காணப்படுவதால் மக்கள் தங்களை வெப்பத்திலிருந்து காத்துக் கொள்ள மெலிசான பருத்தி ஆடைகளை உடுத்துவேண்டும். அத்துடன் தேவையின்றி வீட்டை விட்டு வெளியே வரவேண்டாம் என்றும் டீ, காபி மற்றும் மதுபானம் ஆகியவற்றை பருகுவதை தவிர்க்கவேண்டும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் மக்கள் தண்ணீர், லசி, எலுமிச்சை சாறு, தர்பூசணி, வெள்ளரிக்காய் மற்றும் ஆரஞ்சு ஆகியவற்றை சாப்பிடலாம் என அறிவுறத்தப்பட்டுள்ளது.
முதியவர்கள், குழந்தைகள் மற்றும் கர்ப்பிணி பெண்கள் ஆகியவர்கள் தங்களை குளிர்ந்த நீர் மற்றும் ஐஸ் பேக் ஆகியவற்றை பயன்படுத்தி வெப்பத்திலிருந்து தங்களை காத்துக் கொள்ளவேண்டும். அத்துடன் உடல் நிலை சரியில்லாதவர்கள் உடனடியாக அருகிலுள்ள மருத்துவமனையை அணுகவேண்டும். மதியம் 12 மணி முதல் 3 மணி வரை வெப்பத்தின் தாக்கம் அதிகமாக இருக்கும் என்பதால் பொதுமக்கள் அந்த நேரங்களில் வெளியே வராமல் வீட்டில் இருப்பது நல்லது என்றும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.