உலகில் இரைச்சல் அதிகமுள்ள நகரங்களின் பட்டியலில் இந்திய நகரங்களும் இடம்பெற்றுள்ளன.
ஐ.நா. சபையின் சுற்றுச்சூழல் அமைப்பு, உலக அளவில் ஒலி மாசுபாடு மிகுந்த நகரங்களின் பட்டியலை வெளியிட்டுள்ளது. அதன்படி, உலகிலேயே அதிக ஒலி மாசுமிக்க முதல் ஐந்து நகரங்களின் பட்டியலில், வங்களாதேசத்தின் தலைநகர் டாக்கா நகரம் 119 டெசிபல் ஒலி மாசுடன் முதலிடத்திலும், உத்தரப்பிரதேசத்தின் மொராதாபாத் 114 டெசிபல் ஒலி மாசுடன் இரண்டாம் இடத்திலும், பாகிஸ்தான் தலைநகர் இஸ்லாமாபாத் 105 டெசிபல் ஒலி மாசுடன் மூன்றாம் இடத்திலும், வங்களாதேசத்தின் ராஜ்ஷாஹி மற்றும் வியட்நாமின் ஹோ சி மின் நகரம் 103 டெசிபல் ஒலி மாசுடன் நான்காம் இடத்திலும், நைஜீரியாவின் இபாடன் 101 டெசிபல் ஒலி மாசுடன் ஐந்தாம் இடத்திலும் உள்ளன. இந்தப் பட்டியலில் அசன்சோல் (89 டெசிபல்), கொல்கத்தா (89 டெசிபல்), ஜெய்ப்பூர் (84 டெசிபல்), டெல்லி (83 டெசிபல்) ஆகிய இந்திய நகரங்களும் இடம்பெற்றுள்ளன.
ஒலியின் அளவை கணக்கிடுவதற்காகப் பயன்படுவதுதான், டெசிபெல் என்ற அளவீடு. குடியிருப்புப் பகுதிகளில் அதிகபட்ச இரைச்சல் 70 டெசிபலை தாண்டக்கூடாது என உலக சுகாதார நிறுவனம் கூறுகிறது. 70 டெசிபலுக்கு மேல் இரைச்சல் இருந்தால் அது உடல்நலத்துக்குத் தீங்காகவும், ஒலி மாசாகவும் கருதப்படுகிறது. ஒலி மாசுபாடு செவித்திறன் பாதிப்பு, இதய நோய்கள், மன அழுத்தம் உள்ளிட்ட மோசமான பாதிப்புகளை உருவாக்கும் என்று மருத்துவ நிபுணர்கள் எச்சரிக்கின்றனர்.
இதையும் படிக்க: 15 செ.மீ உயர்ந்த தென் சீனக்கடல்! ஆய்வில் வெளியான அதிர்ச்சித் தகவல்!