மோடி அரசின் 'டிஜிட்டல் இந்தியா' - சில சாதனைகளும், சில சறுக்கல்களும்!

மோடி அரசின் 'டிஜிட்டல் இந்தியா' - சில சாதனைகளும், சில சறுக்கல்களும்!
மோடி அரசின் 'டிஜிட்டல் இந்தியா' - சில சாதனைகளும், சில சறுக்கல்களும்!
Published on

பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான அரசின் ஏழாம் ஆண்டு நிறைவு விழாவை தொடர்ந்து தற்போது, அவரது அரசின் முக்கிய முன்னெடுப்புகளில் ஒன்றான 'டிஜிட்டல் இந்தியா' ஆறாம் ஆண்டை நிறைவு செய்திருப்பது பேசுபொருளாகியிருக்கிறது. பிரதமர் மோடியும் 'டிஜிட்டல் இந்தியா' திட்டம் பற்றி பெருமையாகவே பேசியிருக்கிறார்.

நோக்கத்தின் அடிப்படையில் பார்த்தால் நிச்சயம் 'டிஜிட்டல் இந்தியா' போற்றுதலுக்குறிய திட்டம்தான். ஆனால், இந்த திட்டத்தை 'மோடி அரசின் சாதனை என வர்ணிக்க முடியுமா?' எனும் கேள்விக்கு விடை காண, இதன் குறை, நிறைகள் மற்றும் விமர்சனங்களையும் பார்க்கலாம்.

மோடி பிரதமராக பதவியேற்ற ஒராண்டுக்கு பிறகு 2015 ஜூலை முதல் தேதி 'டிஜிட்டல் இந்தியா' திட்டத்தை அறிவித்தார். மிகவும் விரிவாகவே இந்த அறிவிப்பு அமைந்திருந்தது. இந்தியாவை டிஜிட்டல் ஆற்றல் மிக்க தேசமாகவும், இந்திய சமூகத்தை அறிவுசார் சமூகமாகவும் உருவாக்கும் நோக்கத்துடன் இந்த திட்டம் அறிவிக்கப்பட்டது.

இணைய வசதி, திறன் வளர்ச்சி, டிஜிட்டல் நிர்வாகம் ஆகியவற்றை ஒருங்கிணைந்து வழங்கக் கூடிய திட்டமாக 'டிஜிட்டல் இந்தியா' முன்வைக்கப்பட்டது. மேட்டுக்குடியினருக்கு மட்டும் அல்லாமல், ஏழைகளுக்குமான 'டிஜிட்டல் இந்தியா'வை உருவாக்குவதே நோக்கம் என பிரதமர் மோடி இத்திட்டம் பற்றி குறிப்பிட்டிருந்தார்.

'ஒவ்வொரு குடிமகனும், வங்கி கணக்கை செல்போன் மூலம் இயக்குவது சாத்தியமாக வேண்டும், அரசுடன் தொடர்பு கொள்வது, தினசரி பணிகளை மேற்கொள்வது சாத்தியமாக வேண்டும் என்பது எங்கள் நோக்கம். இதற்காக நாம் டிஜிட்டல் இந்தியாவை நோக்கியை பயணத்தை மேற்கொள்ள வேண்டும்' என்று பிரதமர் மேலும் குறிப்பிட்டிருந்தார்.

காங்கிரஸ் ஆட்சியின் முன்னெடுப்பும் டிஜிட்டல் இந்தியாவும்:

இந்த நோக்கத்தை குறை சொல்ல முடியாது என்பதோடு வரவேற்கவும் செய்யலாம். ஏனெனில், தொழில்நுட்ப முன்னேற்றத்தால் உலகம் நான்காம் தொழில் புரட்சிக்கு தயாராகி வருவதாக சொல்லப்படும் நிலையில், டிஜிட்டல் மயமாக்கல் புதிய அலையாக உருவாகி கொண்டிருந்த நிலையில், இந்தியா ஒரு தேசமாக டிஜிட்டல் பாதையை சரியாக தேர்வு செய்திருந்தது.

அதிலும், நாட்டின் மக்கள்தொகையில் 19 சதவீதம் மட்டுமே இணைய வசதி பெற்றிருந்த காலத்தில், 15 சதவீதம் பேர் மட்டுமே செல்போன் வசதி பெற்றிருந்த நிலையில், டிஜிட்டல் சேவைகளை வலியுறுத்தும் வகையிலான அரசின் பிரதான முன்னெடுப்பு தொலைநோக்கானது என்றே சொல்ல வேண்டும். அந்த வகையில் மோடி சரியாகவே துவங்கியிருந்தார்.

ஆனால், 'டிஜிட்டல் இந்தியா' திட்டம் தொடர்பான விமர்சனம் எழாமல் இல்லை. ஏற்கெனவே காங்கிரஸ் அரசு காலத்தில் அறிவிக்கப்பட்ட 'மின் ஆளுமை' திட்டங்களின் தொகுப்புதான் புதிய திட்டமாக அறிவிக்கப்பட்டுள்ளது என்று காங்கிரஸ் கட்சி சார்பில் விமர்சனம் முன்வைக்கப்பட்டது. இன்னொரு தரப்பினர், நாட்டின் முக்கிய பிரச்னைகளை எல்லாம் விட்டுவிட்டு 'டிஜிட்டல் இந்தியா' தேவையா என்றும் கேள்வி எழுப்பினர்.

காங்கிரஸ் கட்சி விமர்சனத்தில் ஒரளவு உண்மை இருந்தாலும், 'டிஜிட்டல் இந்தியா' என்பது உண்மையில் 21-ம் நூற்றாண்டில் இந்தியாவுக்கு தேவையான வழிகாட்டுதலை அளிக்க கூடிய ஒருங்கிணைப்பை கொண்டிருந்தது என்பதில் சந்தேகம் இல்லை. 2006-ல் கொண்டு வரப்பட்ட 'தேசிய மின் ஆளுகை திட்டம்', 2011-ல் கொண்டு வரப்பட்ட தேசிய கண்ணாடி இழை வலைப்பின்னல் மற்றும் ஆதாருக்கான அடிப்படை திட்டம் உள்ளிட்டவைதான் 'டிஜிட்டல் இந்தியா'வுக்கான அடித்தளம்.

ஆனால், அரசு சேவைகளை டிஜிட்டல் முறையில் வழங்குவதன் அவசியத்தை உணர்ந்து அதற்கான விரிவான பார்வையோடு 'டிஜிட்டல் இந்தியா' திட்டத்தை வகுத்திருந்தது. இந்த திட்டம் ஆறு முக்கிய தூண்களை கொண்டிருந்தது. அரசு சேவைகளை மக்களுக்கு டிஜிட்டல் முறையில் வழங்குவது, குக்கிராமங்களுக்கும் அகண்ட அலைவரிசை இணைய சேவை வழங்கும் பாரத் நெட் திட்டம் உள்ளிட்ட அம்சங்களாக இவை அமைந்திருந்தன.

எந்த அளவுக்கு பயன்தந்தது?

வறுமை, வேலையில்லா திண்டாட்டம், விவசாயம் போன்ற முக்கிய பிரச்னைகளை எல்லாம் விட்டுவிட்டு 'டிஜிட்டல் இந்தியா' போன்ற திட்டம் தேவையா எனும் விமர்சனத்திற்கான பதில், 'தேவை' என்பதுதான். வேகமாக மாறி வரும் உலகில் நவீன தொழில்நுட்பத்தின் மூலமே அன்றாட பிரச்னைகளுக்கான தீர்வுகளை வழங்க முடியும். திறன் வளர்ச்சி உள்ளிட்டவை டிஜிட்டல் இந்தியாவில் முக்கிய அம்சங்களாக இருந்ததே இதற்கு சான்று.

ஆக, டிஜிட்டல் இந்தியா தேசத்தை மாற்றிக்காட்டக்கூடிய ஆற்றல் கொண்டது என்பதில் மாற்றுக்கருத்துக்கு இடமில்லை என்றாலும், நடைமுறையில் 'டிஜிட்டல் இந்தியா திட்டம்' எந்த அளவிற்கு பயன் தந்துள்ளது என்பதை ஆய்வுக்குள்ளாக்குவது அவசியம்.

முதல் பார்வையில், இந்தியாவில் இணைய வசதி அதிகரித்திருப்பதும், செல்போன் பயன்பாடு பரவலாகி இருப்பதும், இந்த திட்டத்தின் பயனாக கொள்ளலாம். கொரோனா பொதுமுடக்க சூழலில், இணைய கல்விக்கு மாறும் கட்டாயம் ஏற்பட்டபோது, தேசம் அதற்கேற்ப சமாளித்ததையும் குறிப்பிடலாம். ஆனால், இதில் போதாமைகள் இருப்பதும் கண்கூடு. இணைய வசதி இன்னமும் பலரை சென்றடையவில்லை. கடைக்கோடி இந்தியனுக்கும் அகண்ட அலைவரிசை சேவை அளிப்பதாக சொல்லப்பட்ட பாரத் நெட் திட்டம் நொண்டி கொண்டிருக்கிறது.

அதிலும் குறிப்பாக, கொரோனா பொதுமுடக்கத்திற்கு மத்தியில் ஆன்லைன் கல்விக்கு மாறிய நிலையில், இணைய வசதியும், அதற்கான சாதனமும் இல்லாமல் தவித்த எண்ணற்ற ஏழை மாணவர்களுக்கு பாரத் நெட் உதவிக்கு வந்திருந்தால் எப்படி இருந்திருக்கும் என்ற ஏக்கம் ஏற்படாமல் இல்லை.

அதேபோல, 'டிஜிட்டல் இந்தியா'வின் இன்னொரு சாதனையாக கருதப்படக்கூடிய ஆதார் திட்டமும், விமர்சனங்களை கொண்டதாகவே இருக்கிறது. இந்தியா தேர்தலை நடத்தும் அதிசயம் போலவே, 130 கோடிக்கு மேல் மக்கள் தொகை கொண்ட தேசத்தில், ஆதார் போன்ற பயோமெட்ரிக் அடையாள அட்டை திட்டத்தை நடைமுறைப்படுத்தியதை பெரும் சாதனை என்றே சொல்ல வேண்டும்.

ஆனால், ஆதார் திட்டம் தொடர்பாக இருக்கும் தனியுரிமை கவலைகள் இன்னமும் அரசால் சரியாக பதில் அளிக்கப்படாமல் இருக்கிறது. அதோடு, மானியங்களை பயனாளிகளுக்கு நேரடியாக அளிக்க உதவுவதற்கான திட்டம் என்று சொல்லப்பட்டதற்கு மாறாக, விளம்பு நிலை பயனாளிகள் பலர் அவற்றில் இருந்து விலக்கப்படும் நிலை வேதனையான நிஜம். ஆதார் தொடர்பான அடிப்படை கேள்விகள் எழுப்பபட்ட நிலையில், வங்கிச்சேவை உள்ளிட்ட பலவற்றிலும் ஆதாரை தொடர்புபடுத்தியது விவாதத்திற்கு உரியதாகவே தொடர்கிறது.

ஆதார் போலவே, கொரோனா சூழலில் அறிமுகம் செய்யப்பட்ட 'ஆரோக்கிய சேது' செயலியும் சர்ச்சைக்குறியதாகவே இருக்கிறது. இந்த செயலி மூலம் தரவுகள் சேகரிக்கப்படும் முறை குறித்து தெளிவான வெளிப்படையான விளக்கம் இல்லை.

அண்மையில், அறிமுகம் செய்யப்பட்ட மாற்றி அமைக்கப்பட்ட வருமான வரி துறை இணையதளம் துவக்க நாள் அன்றே திணறியதையும் இங்கே நினைவில் கொள்ள வேண்டும்.

ஆனால், பண பரிவர்த்தனை மற்றும் நிதிச்சேவைகள் வழங்குவதில் 'டிஜிட்டல் இந்தியா' சாதித்திருக்கிறது என்றே சொல்ல வேண்டும். பணமதிப்பு நீக்கத்திற்கு பின் இந்தியா தவித்தாலும், கொரோனா சூழலில் பண பரிவர்த்தனை பெரிய பிரச்னையாக அமையவில்லை. பெரும்பாலனோர் டிஜிட்டல் சேவைக்கு மாறினர் என்றால், இதற்கு அடிப்படையாக அமைந்திருந்தது, யுபிஐ டிஜிட்டல் பரிவர்த்தனை மேடைதான். 'ஜிபே' போன்ற சேவைகளே கூட பயன்படுத்தும் வகையில் வலுவான அடித்தளமாக யுபிஐ அமைந்திருக்கிறது.

வேதனைக்குரிய டிஜிட்டல் பாகுபாடு:

இதேபோல, 'யுபிஐ' அடிப்படையாக உருவாக்கப்பட்ட 'பீம்' செயலியையும் சிறப்பானது என சொல்லலாம். அனைவருக்கும் டிஜிட்டல் பரிவர்த்தனை வசதி என்று சொல்லப்படுவதை நோக்கி பயணிக்க கூடிய சாத்தியத்தை இந்த நிதிச்சேவைகள் அளிக்கின்றன. தனியார் நிறுவனங்களுக்கு ஆதரவான போக்கு என்ற விமர்சனம் இருந்தாலும், நிதி வசதிகளை டிஜிட்டல்மயமாக்கியதில் இந்தியா உலகையே வியப்பில் ஆழ்த்தியுள்ளது. ஆனால், டிஜிட்டல் மோசடிகளை தடுப்பதில் இன்னமும் கவனம் தேவை.

மின் ஆளுகையின் ஒரு பகுதியாக அரசு சேவைகளை இணையம் மூலம் அணுகுவது எளிதாகி இருந்தாலும், நகரங்களுக்கும் கிராமங்களுக்கும் இதில் உள்ள இடைவெளியை மறைக்க முடியாது. இன்னும் ஏராளமான மக்கள் டிஜிட்டல் சேவைக்கு வெளியே இருப்பது டிஜிட்டல் பாகுபாடாக வேதனை அளிக்கிறது. இருப்பினும், இணைய கல்விக்கான 'ஸ்வயம்' போன்ற திட்டங்களை நல்ல முன்னுதாரணமாக கருதலாம். இணைய கல்விக்கான இன்னும் விரிவான முயற்சிகள் மேற்கொள்ளப்படுவதும் வரவேற்கத்தக்கது.

அதேபோல வேலைவாய்ப்பு பெருக்கத்திற்காக அறிவிக்கப்பட்ட திறன் வளர்ச்சி திட்டம் எதிர்பார்த்த பலனை அளிக்கவில்லை என்றே சொல்ல வேண்டும். வேலைவாய்ப்பு உருவாக்கத்தில் அரசு கோட்டைவிட்டது போலவே, திறன் வளர்ச்சியிலும் பெரும் தேக்கம் இருக்கிறது. இளம் இந்தியாவை வாட்டும் பிரச்னை இது.

அதேநேரத்தில் நான்காம் தொழில் புரட்சிக்கு அடித்தளமான ஏ.ஐ எனும் செயற்கை நுண்ணறிவின் முக்கியத்துவத்தை அரசு உணர்ந்து இருக்கிறது. இது தொடர்பான விரிவான பரிந்துரைகளை 'நிதி ஆயோக்' வழங்கியிருக்கிறது. எனவே ஏ.ஐ வளர்ச்சிக்கு ஈடு கொடுக்க அதை பயன்படுத்திக்கொள்ள இந்தியா தயார்படுத்தப்பட்டு வருகிறது.

ஆக, 'டிஜிட்டல் இந்தியா முன்னோடி' திட்டமாக இருந்தாலும், சாதனைகளையும் சறுக்கல்களையும் கொண்டதாகவே இருக்கிறது. சறுக்கல்களை சரி செய்யும் வாய்ப்பு இன்னும் இருப்பதை அரசு பயன்படுத்திக்கொள்ள வேண்டும் என்பதே கடைக்கோடி இந்தியனின் சார்பாக வைக்கப்படும் கோரிக்கையாக இருக்கும்.

- சைபர்சிம்மன்

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com