’நல்ல மார்க் இருக்கு.. ஆனா நீட் தடையா இருக்கு’! மருத்துவக் கனவில் மண்பாண்ட தொழிலாளி மகள்!!

’நல்ல மார்க் இருக்கு.. ஆனா நீட் தடையா இருக்கு’! மருத்துவக் கனவில் மண்பாண்ட தொழிலாளி மகள்!!
’நல்ல மார்க் இருக்கு.. ஆனா நீட் தடையா இருக்கு’! மருத்துவக் கனவில் மண்பாண்ட தொழிலாளி மகள்!!
Published on

தஞ்சாவூர் மாவட்டம் திருச்சிற்றம்பலம் அருகே உள்ள ஈச்சன் விடுதி கிராமத்தைச் சேர்ந்தவர் சேகர். மண்பாண்ட தொழிலாளியான சேகருக்கு உமாராணி என்ற மனைவியும் ராமசாமி, விஷ்வா என்ற மகன்களும் போத்தீஸ்வரி என்ற மகளும் உள்ளனர். மூத்த மகன் ராமசாமி மாற்றுத்திறனாளி என்பதால் அவருக்கான கல்விச்சலுகை கிடைக்கப்பெற்று சென்னையில் பயின்று வருகிறார்.

போத்தீஸ்வரி அவரது வீட்டிலிருந்து 8 கிலோ மீட்டர் தொலைவில் இருக்கும் திருச்சிற்றம்பலம் அரசு மேல்நிலைப் பள்ளிக்குச் சைக்கிளில் சென்று ஆறாம் வகுப்பு முதல் படித்து வந்தார். ஒவ்வொரு வகுப்பிலும் இவர் தான் முதலிடம் பிடிப்பவர் தினமும் 16 கிலோமீட்டர் தொலைவிற்குச் சைக்கிளில் சென்று வரும் போத்தீஸ்வரியின் குடும்பம் வறுமைக்கோட்டிற்குக் கீழே இருக்கின்ற சூழலில் எப்படியாவது பள்ளியில் முதலிடம் பிடித்து விட வேண்டும் என்ற உறுதியுடன் படித்து, பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வில் 449 மதிப்பெண் பெற்று பள்ளியில் முதலிடம் பிடித்திருக்கின்றார். அதேபோல் 12ம் வகுப்பிலும் 491 மதிப்பெண் பெற்று பள்ளியில் முதலிடம் பெற்றிருக்கிறார்.

நன்றாகப் படித்து மருத்துவராகி தன் குடும்பத்தின் வறுமையைப் போக்க வேண்டும் மற்றும் ஏழைகளுக்கு உதவ வேண்டும் என்பதுதான் போத்தீஸ்வரியின் இளம் வயது கனவாக இருந்து வந்திருக்கிறது.

எப்படியாவது பள்ளியில் முதலிடம் பிடித்து விட்டால் கனவு நிறைவேறிவிடும் என்று நினைத்த போத்தீஸ்வரிக்கு தடையாக இருந்தது நீட் கோச்சிங், நல்ல கோச்சிங் சென்டரில் சேர்ந்து படிக்க வேண்டும் என்றால் சில லட்சங்கள் செலவு ஆகும் என்ற சூழலில் அவரது தந்தைக்கோ அவரை வெளியில் கொண்டு சென்று படிக்க வைக்க முடியாத சூழல்.

மண்பாண்டத் தொழிலை மட்டுமே நம்பி இருக்கும் சேகர் குடும்பத்திற்கு மண்பாண்டங்களால் போதிய வருமானம் இல்லாமல் மூன்று பிள்ளைகளையும் படிக்க வைத்து குடும்பத்தை நடத்த வேண்டிய இக்கட்டான சூழலில் மகளின் கனவை நிறைவேற்ற முடியாத நிலையே இருக்கின்றது. பெரிய படிப்பெல்லாம் படிக்க வைக்க முடியாது என்று மகளிடம் சொன்ன சேகர் என்ன கிடைக்கிறதோ அதனைப் படி என்று மட்டும் சொல்லி இருக்கின்றார். தந்தையின் சூழ்நிலை அறிந்து தந்தை சொன்னதை ஏற்றுக் கொண்ட போத்தீஸ்வரி தன்னுடைய கனவுகளை எல்லாம் மனதிற்குள் புதைத்து வைத்துவிட்டுக் கிடைப்பதைப் படிப்போம் என்ற நிலையிலிருந்து வருகின்றார்.

போத்தீஸ்வரி குறித்து அவரது தந்தை சேகர் பேசும்போது, ‘  பள்ளியில் சேர்த்த முதல் நாளிலிருந்து படிப்பில் அதிக கவனம் செலுத்தி ஆர்வமுடன் படித்து முதல் மதிப்பெண்ணும் எடுத்து தனக்குப் பெருமை சேர்த்த என் மகளின் கனவை நிறைவேற்ற முடியவில்லை’ என்று வேதனையோடு தெரிவித்தார்.

வீட்டிற்குச் சரியான வழித்தடம் கூட இல்லாத சூழலில் பள்ளியில் ஜெயித்து விட்ட போத்தீஸ்வரியின் நீண்ட கால கனவில் ஜெயிக்க தமிழக அரசு உதவ வேண்டும். 

- குமரேசன்

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com