பன்னிரெண்டாம் வகுப்பு தேர்வு நடத்துவது குறித்த விவகாரத்தில் மத்திய அரசை பின்பற்றக் கூடாது என கல்வியாளர் ஆயிஷா நடராஜன் தெரிவித்துள்ளார். 2020 - 21 கல்வியாண்டிற்கான CBSE பன்னிரெண்டாம் வகுப்பு தேர்வை ரத்து செய்வதாக பிரதமர் மோடி நேற்று அறிவித்தார். இதையடுத்து குஜராத் உட்பட சில மாநிலங்கள் தங்கள் மாநிலத்தில் பன்னிரெண்டாம் வகுப்பு தேர்வை ரத்து செய்வதாக அறிவித்துள்ளது.
தமிழகத்தில் பன்னிரெண்டாம் வகுப்பு தேர்வை நடத்துவதா அல்லது ரத்து செய்வதா என்பது குறித்து தமிழக அரசு மாணவர்கள், பெற்றோர்கள் மற்றும் கல்வியாளர்களின் பரிந்துரையின் அடிப்படையில் ஆலோசித்து வருகிறது. இந்நிலையில் இது குறித்து கல்வியாளர்களின் யோசனை என்ன என்பதை பார்ப்போம்.
ஆயிஷா நடராஜன் : “பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வை ரத்து செய்வதில் எந்த சிக்கலும் இல்லை. பதினோராம் வகுப்பில் அவர்கள் கேட்கின்ற பாட பிரிவை கொடுங்கள் என உத்தரவு பிறப்பிக்கலாம். அதனால் இந்த விவகாரத்தில் கல்லூரியில் மாணவர்களை எப்படி அனுமதிப்பது என்பது குறித்து ஒரு முடிவுக்கு வந்த பிறகு பன்னிரெண்டாம் வகுப்பு குறித்து முடிவு செய்யலாம். நோய் தொற்று பரவல் அதிகம் உள்ள இந்த சூழலில் கொள்ளைப்புறமாக நுழைவுத்தேர்வை நுழைக்கும் பணிகள் நடைபெறுவதாக தெரிகிறது” என அவர் தெரிவித்துள்ளார்.
ஜெயப்பிரகாஷ் காந்தி : “பன்னிரெண்டாம் வகுப்பு தேர்வு நடத்தாமல் போனால் அதற்கு முதல் காரணம் மாணவர்களின் ஆரோக்கிய நலனாக மட்டுமே இருக்கும். தேர்வு நடத்தப்படாமல் போனால் மதிப்பெண்களை வழங்க பள்ளிகளில் சிறப்பு கமிட்டி அமைக்க வேண்டும். அதன் மூலம் மதிப்பெண் வழங்குவதில் முறைகேடுகளை தவிர்க்கலாம்” எனத் தெரிவித்துள்ளார்.
ராமசுப்ரமணியன் : “மத்திய அரசு தேர்வை ரத்து செய்துள்ளது. அதேபோல இங்கும் தேர்வுகளை ரத்து செய்து மாணவர்களுக்கு மதிப்பெண் வழங்க வேண்டும். செய்முறை தேர்வுகள் நடந்துள்ளன. அதே போல மாதிரி தேர்வுகளும் நடந்துள்ளன. அதன் அடிப்படையில் மதிப்பெண் வழங்கலாம். தேர்வுகளை நடத்துவதென்பது நடக்காத ஒன்று” எனத் தெரிவித்துள்ளார்.
ரமேஷ் பிரபா : “தேர்வை ரத்து செய்துவிட்டு ஏதோ ஒன்றின் அடிப்படையில் மதிப்பெண்களை போடும்போது அது சரியாக இருக்காது. அதனால் இப்போதைக்கு இல்லை என்றாலும் நிலைமை கட்டுக்குள் வந்ததும் தேர்வுகளை நடத்த வேண்டும். அதேபோல ஆன்லைன் கல்வி சூழலுக்கு ஏற்ப எளிமையான முறையில் தேர்வு நடைபெற வேண்டும். அது தான் உயர்கல்வி சேர்க்கைக்கு முறைபடுத்தப்பட்ட ஒன்றாக இருக்கும்” எனத் தெரிவித்துள்ளார்.
நெடுஞ்செழியன் : “இந்த விவகாரத்தில் நாம் அவசரம் காட்ட தேவையில்லை. புதிதாக பதவி ஏற்றுள்ள அரசு இது. இப்போதைக்கு கொரோனா தொற்று பரவலை கட்டுக்குள் கொண்டு வரும் பணிகளில் கவனம் செலுத்தலாம். இயல்பு சூழல் திரும்பியதும் இது குறித்த முடிவை எடுக்கலாம்” எனத் தெரிவித்துள்ளார்.