பன்னிரெண்டாம் வகுப்பு தேர்வு நடத்துவது குறித்த விவகாரத்தில் மத்திய அரசை பின்பற்றக் கூடாது என கல்வியாளர் பிரின்ஸ் கஜேந்திரபாபு தெரிவித்துள்ளார். 2020 - 21 கல்வியாண்டிற்கான CBSE பன்னிரெண்டாம் வகுப்பு தேர்வை ரத்து செய்வதாக பிரதமர் மோடி அறிவித்தார். இதையடுத்து குஜராத் உட்பட சில மாநிலங்கள் தங்கள் மாநிலத்தில் பன்னிரெண்டாம் வகுப்பு தேர்வை ரத்து செய்வதாக அறிவித்துள்ளது.
இந்நிலையில் இது குறித்து தனது கருத்தை தெரிவித்துள்ளார் பிரின்ஸ் கஜேந்திரபாபு. அவர் கூறும்போது,
“CBSE பன்னிரெண்டாம் வகுப்பு தேர்வை மத்திய அரசு ரத்து செய்துள்ளது. ஆனால் நீட் தேர்வை மத்திய அரசுதான் நடத்துகிறது. மாணவர்களின் உடல் நலனை கருத்தில் கொண்டு இந்த தேர்வை ரத்து செய்வதாக மத்திய அரசு தெரிவித்துள்ளது. பிளஸ் 2 தேர்வு எழுதும்போது மாணவர்களுக்கு பரவுகின்ற தொற்று, நீட் எழுதும் போது பரவாதா? ஒரு மாநிலம் மாணவர்கள் மற்றும் மாநில நலன் சார்ந்து இந்த முடிவை எடுக்க வேண்டியுள்ளது. அதனால் இந்த விவகாரத்தில் மத்திய அரசை பின்பற்றக் கூடாது” என அவர் தெரிவித்துள்ளார்.