நோய்த்தொற்று பரவலினால் பள்ளிகள் நீண்ட காலமாக மூடப்பட்டுள்ளது. இதனால் மாணவர்களுக்கு பாடங்கள், தேர்வுகள் என அனைத்தும் டிஜிட்டல் முறையில் நடத்தப்படுகின்றன. குழந்தைகளுக்குத் தேவையான சகல வசதிகளையும் கொடுக்க பெற்றோர்கள் முயற்சித்து வருகின்றனர். ஆனால் வாழ்க்கை முறையில் மாற்றம் மற்றும் நீண்ட நேரம் செல்போன் அல்லது கம்ப்யூட்டர் திரையில் முன்பு இருப்பது போன்றவற்றை குழந்தைகளால் அவ்வளவு எளிதாக ஏற்றுக்கொள்ள முடிவதில்லை. சில எளிய வழிகள் ஆன்லைன் கல்விமீது குழந்தைகளின் கவனத்தைத் திருப்பும்.
மற்ற ஆப்களின்மீது கவனம் சென்றுவிடக்கூடாது
சில பெற்றோர்கள் ஆன்லைன் வகுப்புத் தொடங்கிவிட்டால் குழந்தைகளின் கையில் செல்போனை கொடுத்துவிட்டு அல்லது கம்ப்யூட்டர் முன்பு உட்காரவைத்துவிட்டு தங்கள் வேலையைப் பார்க்க சென்றுவிடுவார்கள். ஆனால் பள்ளிக்குச் சென்று பாடம் கற்பதைவிட ஆன்லைனில் கற்றுக்கொள்ள அதிக கவனம் தேவை. எனவே குழந்தைகள் கேம் விளையாடுகிறார்களா அல்லது மெசேஜிங் ஆப்ஸ்களை பயன்படுத்துகிறார்களா என பெற்றோர்கள் கவனிக்கவேண்டும்.
ஆன்லைன் வகுப்புகளுக்கு வீட்டில் தனி இடத்தை ஒதுக்குங்கள்
தினமும் குழந்தைகள் ஆன்லைன் வகுப்புகளுக்காக பலமணிநேரம் செலவிடவேண்டி இருக்கும். எனவே அவர்களுக்கு அமைதியான, வசதியான, எந்த கவனச்சிதறலும் ஏற்படாத வண்ணம் ஒரு இடத்தை ஒதுக்கவேண்டும். மேலும் அவர்கள் அமரும் நாற்காலி மற்றும் டேபிள் ஆகியவை சௌகர்யமாக இருக்கவேண்டும்.
தொழில்நுட்பக் கோளாறு வராமல் பார்த்துக்கொள்ளுங்கள்
சரியாக இண்டெர்நெட் வசதி இல்லாதபோது ஆடியோ சரியாக கேட்காது. அதிகப்படியான தொழில்நுட்பக் கோளாறுகள், குழந்தைகள் கவனம் செலுத்தி படிப்பதற்கு தடையாக அமையும்.
படிப்பதை மேற்பார்வையிடல் அவசியம்
அவர்கள் என்ன படிக்கிறார்கள் என்று அடிக்கடி கேள்வி கேளுங்கள். இடைவேளைகளில் இன்று என்ன சொல்லிக்கொடுத்தார்கள் என கேட்கவேண்டும். மேலும் படிப்பதற்கு இருக்கும் பிரச்னைகளைப் பற்றியும் கேட்பது அவசியம்.
திரையின் முன்பு இருக்கும் நேரத்தைப் பற்றி எடுத்துக் கூறுங்கள்
நீண்டநேரம் திரைமுன்பு அமர்ந்திருக்கும் குழந்தைகளுக்கு வெளியே சென்று விளையாட தோன்றாமல், வகுப்புகள் முடிந்த உடனே ஸ்மார்ட்போனில் விளையாட வேண்டும் என்று ஆசைப்படுவார்கள். எனவே அதிக நேரம் திரையின்முன்பு இருக்கும் ஆபத்தைப் பற்றி குழந்தைகளுக்கு எடுத்துக்கூறுவது அவசியம். மேலும் புத்தகங்களைப் படிக்க அவர்களை ஊக்குவிக்க வேண்டும்.
குழந்தைகளின் வேகத்தை மாற்றவேண்டாம்
குழந்தைகளை அனைத்து வீட்டுப் பாடங்களையும் ஒரேநேரத்தில் செய்துமுடிக்க வற்புறுத்த வேண்டாம். அவர்கள் வேகத்திற்கு ஏற்ப செய்துமுடிக்க நேரம் கொடுங்கள். கொரோனா காலத்தில் பெற்றோருக்கும் அதிக அழுத்தம் இருக்கும். அதை குழந்தைகளின்மீது திணிக்கவேண்டாம்.