11 ஆம் வகுப்புக்கான பொதுத்தேர்வு முடிவுகள் நாளை காலை 09.30 மணிக்கு வெளியாகும் என்று தமிழ்நாடு அரசு தேர்வுகள் இயக்ககம் தெரிவித்துள்ளது.
தமிழகத்தில் 11 ஆம் வகுப்புக்கான, 600 மதிப்பெண்களுக்கு நடத்தப்பட்ட பொதுத்தேர்வானது மார்ச்- 6 ஆம் தேதி தொடங்கி மார்ச்-22 இல் முடிவடைந்தது. பிளஸ்-1 மாணவ, மாணவிகளுக்கான பொதுத்தேர்வு முடிவுகள் மே-8 ஆம் தேதி வெளியிடப்படுவதாக பள்ளிக்கல்வித்துறை ஏற்கெனவே அறிவித்திருந்தது.
இதனையடுத்து தேர்தல் பணியிலிருந்த ஆசிரியர்கள், வினாத்தாள் திருத்தும் பணியிலும் ஈடுபடுத்தப்பட்டிருந்தனர். எனினும் வினாத்தாள் திருத்தும் பணி வெற்றிகரமாக நிறைவடைந்தது. இதன்படி அறிவித்தபடியே நாளை காலை 09.30 மணிக்கு 11 ஆம் வகுப்பு மாணவர்களுக்கான தேர்வு முடிவுகளை இணையதளங்களில் அறியலாம்.
பிளஸ்-1 தேர்வு முடிவுகளை www.tnresults.nic.in, www.dge1.tn.nic.in மற்றும் www.dge2.tn.nic.in - போன்ற மூன்று இணையதள முகவரியில் சென்று அறிந்து கொள்ளலாம். மேலும் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் உள்ள தேசிய தகவல் மையங்கள், மாணவர்கள் தாங்கள் பயின்ற பள்ளிகள் ஆகியவற்றின் மூலமாகவும் தேர்வு முடிவுகளை அறியலாம். அதுமட்டுமின்றி மாணவர்கள் தாங்கள் பயின்ற பள்ளியில் பதிவு செய்துள்ள பெற்றோரின் தொலைபேசி எண்ணிற்கும், தனித்தேர்வர்கள் தேர்விற்கு விண்ணப்பிக்கும்போது பதிவு செய்த கைப்பேசி எண்ணிற்கும் தேர்வு முடிவுகள் எஸ்.எம்.எஸ் மூலமாக அனுப்பப்படும் என்றும் அரசு தேர்வுகள் இயக்ககம் தெரிவித்துள்ளது.