குரூப் 2 மற்றும் குரூப் 4 தேர்வு முடிவுகள் இந்த மாதம் இறுதியில் வெளியிடப்படும் என தகவல் வெளியாகியுள்ளது.
தமிழக அரசின் பல்வேறு துறைகளில் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்புவதற்கான போட்டித் தேர்வு மற்றும் நேர்காணல்களை தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் நடத்தி வருகிறது. கடந்த மே மாதம் 21-ம் தேதி நடைபெற்ற குரூப் 2 தேர்வை 9 லட்சத்து 94 ஆயிரத்து 890 பேர் எழுதியிருந்தனர். குரூப் 4 தேர்வை கடந்த ஜூலை மாதம் 24-ம் தேதி 18 லட்சத்து 50 ஆயிரத்து 477 பேர் எழுதி இருந்தனர். இதற்கான முடிவுகள் கடந்த செப்டம்பர் மாதம் வெளியாகியிருக்க வேண்டும்.
இதற்காக தேர்வு எழுதியவர்கள் காத்திருந்தநிலையில், அண்மையில் சென்னை உயர்நீதிமன்றம் மகளிருக்கான இட ஒதுக்கீடு குறித்த தீர்ப்பை வழங்கியது. அதில், தமிழ்நாடு அரசு வேலைவாய்ப்புகளில் மகளிருக்கான 30% இட ஒதுக்கீடு வழங்கும் முறையை மாற்ற வேண்டும் என்று கடந்த செப்டம்பர் மாதம் தீர்ப்பளித்தது.
ஏற்கனவே, மகளிருக்கான இடஒதுக்கீட்டில் நடைமுறையில் இருந்த செங்குத்து நகர்வுக்கு (Vertical Reservation) பதிலாக கிடைமட்ட நகர்வு (Horizontal Reservation) முறை பின்பற்ற வேண்டும் என்றும், நீதிமன்றம் தனது தீர்ப்பில் தெரிவித்திருந்தது. இந்த புதிய நடைமுறையின் படி, மகளிருக்கு முதலில் 30% இட ஒதுக்கீடு வழங்கி விட்டு, மீதமுள்ள இடங்களில் போட்டியிட அனுமதி மறுக்கப்படும்.
கிடைமட்ட இடஒதுக்கீடு (Horizontal Reservation) முறையை நடைமுறைப்படுத்த துவக்க நடவடிக்கையாக ஏற்கனவே வெளியிடப்பட்ட தேர்வு முடிவுகளை பணியாளர் தேர்வாணையம் ஆய்வு செய்து வருவதாக கூறப்பட்டது. புதிய நடைமுறையின் அடிப்படையில் தேர்வு முடிவுகளை வெளியிட காலதாமதம் ஆனதால் இந்த தாமதம் என தகவல் தெரிவிக்கப்பட்டது.
இந்நிலையில் குரூப் 2 மற்றும் குரூப் 4 தேர்வு முடிவுகள் இந்த மாதம் இறுதியில் வெளியிடப்படும் என தகவல் வெளியாகியுள்ளது. சென்னை உயர்நீதிமன்றத்தின் தீர்ப்பின் அடிப்படையில் கலந்தாய்வு நடைபெற்று பணி நியமன ஆணைகள் வழங்கப்படும் எனவும் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.