குரூப் ஒன் தேர்வில் மாநில அளவில் முதலிடம் பிடித்து வெற்றி பெற்றது மகிழ்ச்சியளிப்பதாக செங்கல்பட்டை சேர்ந்த லாவண்யா தெரிவித்துள்ளார்.
செங்கல்பட்டு மாவட்டம் மதுராந்தகம் அருகே உள்ள அச்சரப்பாக்கம் இராவத்தநல்லூர் பகுதியைச் சேர்ந்தவர் லாவண்யா. இவருக்கு திருமணமாகி ஒரு ஆண் குழந்தை உள்ளது. கடந்த மார்ச் மாதம் நடைபெற்ற குரூப் ஒன் தேர்வில் பங்கேற்று தற்போது மாநில அளவில் முதல் இடத்தை பெற்றுள்ளார். இவர் ஏற்கனவே மூன்று முறை குரூப் 2 தேர்வில் தேர்ச்சி பெற்று இருந்தார். கடந்த முறை நடந்த குரூப் 2 தேர்வில், மாநில அளவில் மூன்றாவது இடத்தை பெற்றிருந்த நிலையில், பத்திரப் பதிவுத் துறையில் உதவிப் பதிவாளராக தேர்வு செய்யப்பட்டிருந்தார்.
அந்தப் பணிக்கானப் பயிற்சியில் ஈடுபட்டிருந்த பொழுது குரூப் ஒன் தேர்வில் ஆர்வம் காட்டி, கடந்த மார்ச் மாதம் குரூப் ஒன் தேர்வு எழுதி இருந்தார் லாவண்யா. இந்தத் தேர்வு இவர் இரண்டாவது முறையாக எழுதியிருந்தார். இந்நிலையில், மாநில அளவில் முதல் பெண்மணியாக தேர்ச்சி பெற்றிருப்பது தனக்கு மிகவும் மகிழ்ச்சி அளிப்பதாகவும், நான் விரும்பிய துறையில் பணி செய்ய இருப்பது எனக்கு மிகவும் மகிழ்ச்சி அளிக்கிறது எனவும், திருமணமான பிறகும் எனது கனவுக்கு உதவிய கணவர் மற்றும் பெற்றோருக்கு எனது நன்றிகள் என்று கூறியதுடன், மக்கள் பணியில் தொடர்ந்து நான் ஈடுபட உள்ளேன் என்றும் லாவண்யா கூறியுள்ளார்.