மருத்துவப் படிப்பில் அரசு பள்ளி மாணவர்களுக்கு 7.5 சதவீத உள்இடஒதுக்கீடுகோரி செப்டம்பர் 15ஆம் தேதி சட்ட மசோதாவாக
சட்டப்பேரவையில் தாக்கல் செய்யப்பட்டு ஒருமனதாக நிறைவேற்றப்பட்டது. அன்றைய தினமே ஆளுநரின் ஒப்புதலுக்கு சட்ட மசோதா
அனுப்பி வைக்கப்பட்டது.
நீட் தேர்வு முடிவுகள் வெளியான போதிலும், ஒப்புதலுக்கு அனுப்பி ஒன்றரை மாதங்கள் ஆன நிலையிலும் 7.5 சதவீத உள்இடஒதுக்கீடு மசோதாவுக்கு ஆளுநர் பன்வாரிலால் புரோகித் ஒப்புதல் அளிக்கவில்லை.
ஆளுநரின் ஒப்புதலுக்கு தமிழகமே காத்திருந்த நிலையில், அரசியலமைப்பு சட்டம் 162ஐ பயன்படுத்தி மருத்துவ படிப்பில் அரசு பள்ளி
மாணவர்களுக்கு 7.5 சதவீத உள்இடஒதுக்கீடு வழங்கி தமிழக அரசு அதிரடியாக அரசாணை நேற்று வெளியிட்டது. இந்நிலையில் உள் ஒதுக்கீடு மசோதாவிற்கு ஆளுநர் ஒப்புதல் அளித்துள்ளார். ஆளுநர் ஒப்புதலும் கிடைத்துள்ளதால் விரைவில், தேதி அறிவிப்பு வெளியிடப்பட்டு மருத்துவ கவுன்சிலிங் நடைபெறும் என எதிர்பார்க்கப்படுகிறது.