திருவண்ணாமலை மாவட்டம் வந்தவாசியில் கொரோனா ஊரடங்கு காரணமாக பள்ளிகள் திறக்காததால் மாணவ - மாணவிகள் ஆடுகளை மேய்க்கும் அவலநிலை ஏற்பட்டிருக்கிறது.
திருவண்ணாமலை மாவட்டம் வந்தவாசியை அடுத்த பாதிரி கிராமத்தில், மலைவாழ் மக்கள் 20-க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வருகின்றனர். இவர்கள் மரம் வெட்டுதல், கூலி வேலைக்கு செல்வது, ஆடு மேய்த்தல் போன்ற பல்வேறு வேலைகளை செய்து பிழைப்பு நடத்தி வருகின்றனர்.
கடந்த 2 ஆண்டுகளாக கொரோனா நோய் தொற்று ஊரடங்கு காரணமாக பல்வேறு நிலைகளில் பொதுமக்கள் பெரிதும் வாழ்வாதாரம் இழந்து வருகின்றனர். பள்ளிகள் திறக்காததால் பல மாணவர்கள் கூலி வேலைக்கு செல்லும் சூழலும் ஏற்பட்டிருக்கிறது.
பாதிரி கிராமத்தை சேர்ந்த செல்வி என்ற பள்ளி மாணவி கூலித்தொழிலாளியான தந்தைக்கு உதவியாக ஆடு மேய்த்து வருகிறார். இது தொடர்பாக அந்த பள்ளி மாணவி செல்வி கூறுகையில், “இரண்டு ஆண்டுகளாக பள்ளிகள் திறக்காததால் நாங்கள் படிக்க முடியவில்லை. மேலும் எங்கள் ஊரில் உள்ள சிறு பிள்ளைகள் பள்ளிகள் திறக்காத நிலையில் பாடம் பயில முடியாமல், கல்வியை பெற முடியாமல் தற்போது அவர்களுக்கு தங்களுடைய பெயரை கூட எழுத தெரியவில்லை.
மேலும் மாணவ, மாணவிகள் தாங்கள் கற்ற கல்வியை மறக்க கூடிய மோசமான நிலையில் உள்ளது. இதனால் இளம் மாணவர்களின் எதிர்காலம் மிகப்பெரிய கேள்வி குறியாக மாறி வருகிறது” என தெரிவித்தார்
இதனால் அரசு உடனடியாக பள்ளிகள் திறக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று மாணவர்கள் மற்றும் பொதுமக்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.