ஆசிரியர்களுக்கான தேசிய விருது மற்றும் சிக்ஷக் பர்வ் எனும் ஆசிரியர் திருவிழா குறித்து பள்ளிக் கல்வி கூடுதல் செயலாளர் சந்தோஷ் குமார் சாரங்கி மற்றும் இணை செயலாளர்கள் ஆர்.சி. மீனா மற்றும் விபின் குமார் ஆகியோர் இணைந்து பத்திரிகையாளர் சந்திப்பு ஒன்றை இன்று நடத்தினர்.
சாரங்கி கூறுகையில், “நமது ஆசிரியர்களின் மதிப்புமிகுந்த பங்களிப்பை அங்கீகரிக்கும் வகையிலும், புதிய கல்விக் கொள்கை 2020-யை முன்னெடுத்து செல்லும் வகையிலும், சென்ற வருடத்தை போலவே இந்த வருடமும் ஆசிரியர் திருவிழாவை கொண்டாட பள்ளி கல்வி மற்றும் எழுத்தறிவு துறை முடிவெடுத்துள்ளது. 2021 செப்டம்பர் 5 முதல் 17 வரை காணொலி முறையில் இது நடைபெறும்.
இரண்டு கோடிக்கும் அதிகமான ஆசிரியர்களுக்கு தடுப்புமருந்து வழங்குவதற்கான பணி நடைபெற்று வருவதாகவும், மாநிலங்களில் இதன் முன்னேற்றத்தை பள்ளி கல்வி மற்றும் எழுத்தறிவு துறை கண்காணித்து வருகிறது” என்றார்.
“இந்த ஆசிரியர் திருவிழா பள்ளிகளை மீண்டும் திறப்பதற்கான முடிவுகளுக்கு இது வலு சேர்க்கும். 2021 செப்டம்பர் 5 அன்று காணொலி மூலம் 44 ஆசிரியர்களுக்கு குடியரசுத் தலைவர் ராம் நாத் கோவிந்த் விருது அளிப்பார். ஒவ்வொரு ஆசிரியரை பற்றியும் ஆவணப்படம் ஒன்று திரையிடப்படும்” என்று மீனா தெரிவித்தார்.
2021 செப்டம்பர் 7 அன்று காலை 7 மணிக்கு ஆசிரியர்கள், மாணவர்கள், பெற்றோர்கள் மற்றும் கல்வித்துறை தொடர்புடையோரிடம் பிரதமர் நரேந்திர மோடி உரையாடுவார் என்று விபின் குமார் தெரிவித்தார். 10,000 வார்த்தைகளை கொண்ட இந்திய சைகை மொழி அகராதி உள்ளிட்ட துறையின் ஐந்து திட்டங்களையும் பிரதமர் தொடங்கி வைப்பார் என்று அவர் கூறினார்.
தகவல் : PIB