மதுரை எய்ம்ஸ் மருத்துவக் கல்லூரியின் முதலாமாண்டு வகுப்புகள் ராமநாதபுரம் மருத்துவக் கல்லூரியில் தொடங்கியுள்ளன.
மதுரையில் எய்ம்ஸ் மருத்துவக் கல்லூரியின் கட்டுமான பணிகள் நடக்கும் நிலையில், முதலாமாண்டு வகுப்புகள் ராமநாதபுரம் மருத்துவக் கல்லூரியில் தற்காலிகமாக செயல்படும் என அறிவிக்கப்பட்டிருந்தது. இதையடுத்து வகுப்புகள் இன்று தொடங்கின. தற்போது 50 மாணவர்களை சேர்க்க அனுமதிக்கப்பட்டுள்ள நிலையில் 37 பேர் சேர்ந்துள்ளனர்.
முதல் நாள் வகுப்புக்கு வந்த மாணவர்களை பேராசிரியர்கள் வரவேற்றனர். இதையடுத்து மாணவர்களுக்கு இடையே அறிமுக நிகழ்ச்சி நடைபெற்றது. செய்தியாளர்களிடம் பேசிய மதுரை எய்ம்ஸ் மருத்துவமனை செயல் இயக்குநர் ஹனுமந்தராவ், இன்னும் 2 ஆண்டுகளுக்கு தற்காலிகமாக ராமநாதபுரத்தில் செயல்படும் எனவும் பின்னர் மதுரையிலிருந்து செயல்படத் தொடங்கும் என்றும் தெரிவித்தார்.