காலிப் பணியிடங்களில் தற்காலிக ஆசிரியர் நியமனத்திற்கு இடைக்கால தடை! - நீதிமன்றம்

காலிப் பணியிடங்களில் தற்காலிக ஆசிரியர் நியமனத்திற்கு இடைக்கால தடை! - நீதிமன்றம்
காலிப் பணியிடங்களில் தற்காலிக ஆசிரியர் நியமனத்திற்கு இடைக்கால தடை! - நீதிமன்றம்
Published on

தமிழக அரசுப் பள்ளிகளில் உள்ள காலி பணியிடங்களை தற்காலிக ஆசிரியர்கள் மூலம் நிரப்ப இடைக்கால தடை விதித்து உயர்நீதிமன்ற மதுரைக்கிளை உத்தரவிட்டது. நிரந்தர ஆசிரியர்களை நியமிப்பதில் அரசுக்கு என்ன பிரச்சனை? என்றும் நீதிபதி கேள்வி எழுப்பினார்.

ஆசிரியர் தகுதி தேர்வில் தேர்ச்சி பெற்றவர்கள் சங்கத்தின் தலைவர் ஷீலா உயர்நீதிமன்ற மதுரைக் கிளையில் மனுவினை தாக்கல் செய்திருந்தார். அதில்,"கடந்த 2013ஆம் ஆண்டு நடைபெற்ற ஆசிரியர் தகுதித் தேர்வில் தேர்ச்சி பெற்ற ஏராளமானோர் அப்போதிருந்த வெயிட்டேஜ் முறையால் பணிக்கு தேர்வாகவில்லை. அவர்களில் பெரும்பாலானவர்கள் தற்போதுவரை பணி வாய்ப்பு கிடைக்காமல் பொருளாதார ரீதியாக மிகுந்த சிரமத்தை சந்தித்து வருகின்றனர்.

இந்நிலையில் தமிழக அரசின் பள்ளிகளில் காலியாக உள்ள இடைநிலை, பட்டதாரி, முதுநிலை பட்டதாரி ஆசிரியர் பணியிடங்களை தற்காலிக ஆசிரியர்களைக் கொண்டு நிரப்ப திட்டமிட்டு அரசு கடந்த 23ஆம் தேதி அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது. தற்காலிக ஆசிரியர்கள் தேர்வு தொடர்பாக முறைப்படுத்தப்பட்ட வழிமுறைகள் எதுவும் இல்லை. அந்தந்த மாவட்ட கல்வி அலுவலர்கள் அவர்களுக்கு தேவையான நபர்களை பணியில் நியமித்து கொள்ள வாய்ப்பு உள்ளது.

இதனால் தகுதியற்றவர்கள் தற்காலிக ஆசிரியர்களாக நியமிக்க படுவதற்கான வாய்ப்புகள் உள்ளன. இதனால் மாணவர்களின் எதிர்காலமே பாதிக்கப்படும். அதோடு ஏற்கனவே ஆசிரியர் தகுதித் தேர்வில் தேர்ச்சி பெற்றவர்கள் பணி வாய்ப்பை பெற இயலாத நிலை உருவாகும். ஆகவே இவற்றை கருத்தில் கொண்டு, தமிழக அரசின் பள்ளிகளில் காலியாக உள்ள ஆசிரியர் பணியிடங்களை தற்காலிக ஆசிரியர்கள் மூலம் நிரப்புவது தொடர்பாக கடந்த 23ஆம் தேதி வெளியிடப்பட்ட அறிவிப்பை ரத்து செய்வதோடு, அதன் அடிப்படையில் நடவடிக்கைகளை எடுக்க இடைக்கால தடை விதித்தும் உத்தரவிட வேண்டும்" என கூறியிருந்தார்.

இந்த வழக்கு நீதிபதி எம்.எஸ்.ரமேஷ், முன்பாக விசாரணைக்கு வந்தது. அரசுத் தரப்பில் ஆசிரியர்கள் தற்காலிகமாகவே நியமிக்கப்பட உள்ளனர் என தெரிவிக்கப்பட்டது. அதற்கு நீதிபதி, " தகுதி அடிப்படையில் நியமிப்பதற்கும், முன்னுரிமை அடிப்படையில் நியமிப்பதற்கும் வேறுபாடு உள்ளது. நிரந்தரமாக ஆசிரியர்களை நியமிப்பதில் அரசுக்கு என்ன பிரச்சனை?” என்று கேள்வி எழுப்பினார்.

மேலும், “இது போன்ற முறையற்ற, தற்காலிக ஆசிரியர் நியமனத்தால் தகுதியற்றவர்கள் பணிநியமனம் செய்யப்பட வாய்ப்புள்ளது. இது மாணவர்களின் நலன் சார்ந்தது. ஆகவே, அரசின் இந்த பதில் திருப்திகரமாக இல்லை. ஆகவே, தற்காலிக ஆசிரியர்களை நியமிப்பது தொடர்பான அறிவிப்புக்கு இடைக்கால தடை விதிக்கப்படுகிறது” என உத்தரவிட்டார். இதையடுத்து வழக்கை ஜூலை 8ஆம் தேதிக்கு நீதிபதி ஒத்திவைத்தார்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com