ஆகஸ்ட் 2 முதல் தினமும் ஆசிரியர்கள் பள்ளிக்கு வரவேண்டும் என பள்ளிக் கல்வித்துறை அறிவித்திருக்கிறது.
கொரோனா பெருந்தொற்று காரணமாக கிட்டத்தட்ட ஒன்றரை வருடங்களாக பள்ளிகள் இயங்கவில்லை. வகுப்புகள் அனைத்தும் ஆன்லைன் முறையில் இணையவழியிலேயே நடைபெற்று வருகின்றன. தற்போது தமிழகத்தில் தொற்று குறைந்துள்ளதால் ஊரடங்கு தளர்வுகள் அறிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், ஆசிரியர்கள் மட்டும் பள்ளிக்கு வந்து பணியாற்றுவது குறித்து விரைவில் முடிவெடுக்கப்படும் என பள்ளிக் கல்வித்துறை ஏற்கெனவே அறிவித்திருந்தது.
அதன்படி, ஆகஸ்ட் 2 முதல் தினமும் ஆசிரியர்கள் பள்ளிக்கு வரவேண்டும் என தற்போது அறிவித்திருக்கிறது. மாணவர் சேர்க்கைப் பணிகள் மற்றும் கல்வித் தொலைக்காட்சி பணிகளுக்காக ஆசிரியர்கள் அனைவரும் தினமும் பள்ளிக்கு வந்து பணியாற்றுமாறு பள்ளிக் கல்வித்துறை அறிவித்திருக்கிறது. மேலும், பள்ளிக் கால அட்டவணை தயாரித்தல், பள்ளி வளாகங்களை தூய்மைப்படுத்தல் போன்ற பணிகளுக்காகவும் ஆசிரியர்கள் பள்ளிக்கு வரவேண்டும் என அறிவுறுத்தி இருக்கிறது.
இதற்கிடையே கிராமப்புறங்களில் தொடக்கப்பள்ளிகளை திறப்பது குறித்தும் ஆலோசனை நடைபெற்று வருகிறது. இதுகுறித்த அறிவிப்பு விரைவில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.