அரசு பள்ளியில் பயிலும் மாணவர்களிடம் ஆண்ட்ராய்டு போன் இல்லாத காரணத்தினால், கிராமம் கிராமமாக நேரில் சென்று பாடம் நடத்துகிறார் அரசுப் பள்ளி ஆசிரியை மகாலட்சுமி. அவருக்கு கிராம மக்கள் பாராட்டு தெரிவித்து வருகின்றனர்.
கொரோனா ஊரடங்கு காரணமாக உலகம் முழுவதும் கடந்த ஒன்றரை வருடமாக பள்ளிகள்யாவும் மூடப்பட்டு இருக்கிறது. இருப்பினும், அனைத்து பள்ளிகளிலும், ஆன்லைன் வழியாக பாடம் நடத்தப்பட்டு வருகிறது.
பள்ளிகள் மூடப்பட்டிருப்பதால், மாணவ மாணவிகள் அனைவரும் ஆண்ட்ராய்டு போன் மூலமாக இணைய வழியில் வகுப்பை கவனிக்கின்றனர். இவ்விஷயத்தில் தனியார் பள்ளியை சேர்ந்த மாணவர்களுக்கு, பெரியளவில் பிரச்னை இல்லை; எல்லோருமே ஒரு மொபைல் வைத்திருக்கின்றனர். ஆனால் அரசு பள்ளியில் படிக்கும் கிராமப்புற மாணவர்கள் பெரும்பாலானவர்களிடம் ஆண்ட்ராய்டு போன் இருப்பதில்லை. அவர்களின் அடிப்படை வாழ்வாதாரமே கேள்விக்குறியாகியிருப்பதால், மொபைல் என்பது அவர்களுக்கு மிகப்பெரிய விஷயமாக இருக்கிறது. ஒருவேளை ஆண்ட்ராய்டு போன் வைத்திருந்தாலும் நெட் வசதி ஏற்படுத்திக்கொள்பவர்கள், மிக மிக குறைவுதான். அரசுப் பள்ளியில் படிக்கும் மாணவ மாணவிகள் பெற்றோர்கள் பெரும்பாலும் கூலித் தொழிலாளர்கள் தான் இருப்பார்கள் அவர்களால் அனைத்து குழந்தைகளுக்கும் ஆண்ட்ராய்டு போன் வாங்கி கொடுக்க முடியாத சூழல் தான் உள்ளது.
இதுபோன்ற சூழலில் கடலூர் மாவட்டம் நடுவீரப்பட்டு அரசு பள்ளியில் தமிழ் ஆசிரியராக பணியாற்றும் ஆசிரியை மகாலட்சுமி என்பவர், நடுவீரப்பட்டு பகுதியை சுற்றியுள்ள பாலூர் - பண்ணை குச்சிப்பாளையம் - சூரியன் பேட்டை - குமளங்குளம் - பல்லவராயநத்தம் உள்ளிட்ட 15க்கும் மேற்பட்ட கிராமங்களுக்கு நேரில் சென்று தனது பள்ளியில் படிக்கும் மாணவர்களை சந்தித்து அவர்களுக்கு பாடம் நடத்தி வருகிறார்.
அப்படி கிராமம் கிராமமாக சென்று பாடம் நடத்தும் போது மற்ற பள்ளியில் படிக்கும் மாணவ மாணவிகள் ஆர்வமுடன் அவர் பாடம் நடத்தும் இடத்திற்கு வந்து பாடத்தை கவனித்து தங்களுக்கு எழும் சந்தேகங்களை நிவர்த்தி செய்துகொள்கின்றனர்.
பள்ளிகள் மூடி கிடப்பதால் மாணவர்களின் எண்ணங்கள் சிதறி நம்பிக்கை இழந்து விடக்கூடாது என்பதற்காக கிராமம் கிராமமாக சென்று பாடம் நடத்தி மாணவ மாணவிகளுக்கு தன்னம்பிக்கை ஏற்படுத்தி வருகிறார் அரசு பள்ளி ஆசிரியை மகாலட்சுமி. இப்படி கிராமம் கிராமமாக நேரில் சென்று பாடம் நடத்துவதால் கிராம மக்கள் பலரும் மகாலட்சுமிக்கு பாராட்டு தெரிவிக்கிறார்கள்.
தங்கள் பிள்ளைகளின் எதிர்காலம் வீணாகிவிடுமோ என்று கவலையில் இருந்த பெற்றோர்களுக்கு, அரசுப் பள்ளி ஆசிரியையொருவர் நேரில் வந்து மாணவ மாணவிகளை ஒழுங்குபடுத்துவது - கல்வி கற்றுக் கொடுப்பது - நல்லொழுக்கங்களைக் கற்றுக் கொடுப்பது போன்றவற்றை செய்வது நம்பிக்கையை தந்துள்ளது. கடந்த ஆண்டு கொரோனா சமயத்திலும் இதுபோல் கிராமம் கிராமமாக சென்று பாடம் நடத்தி வந்தார் இந்த ஆசிரியை மகாலட்சுமி. தற்போது இரண்டாவது அலையின் காரணமாக பள்ளிகள் இன்னும் திறக்கப்படவில்லை என்பதால் மீண்டும் இந்த முறையும் கிராமம் கிராமமாக சென்று பாடம் நடத்த தொடங்கியுள்ளார்.
ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு கிராமத்திற்கும் சென்று மாணவ மாணவிகளை அழைத்து பாடம் நடத்தும் இவர், தான் அடுத்த முறை தான் வரும் வரையில் செய்யத்தேவையான வீட்டுப்பாடங்களை கொடுத்துவிட்டு செல்கிறார்.
“இப்படி ஒவ்வொரு கிராமமாக சென்றுவிட்டு, பிறகு மீண்டும் முதல் கிராமத்திற்கு வரும் போது அங்கு மாணவ, மாணவிகள் கடந்த நாட்களில் எழுதிய பாடங்களை காண்பிக்கின்றனர். தினமும் பள்ளிக்கு செல்வது போன்ற உணர்வை இது தருவதாக மாணவ மாணவிகள் தெரிவிக்கின்றனர்” என்கிறார் ஆசிரியர் மகாலட்சுமி.
ஆசிரியரின் இந்த மகத்தான பணிக்கு மாணவ மாணவிகளும் பெற்றோர்களும் பாராட்டுகளை தெரிவித்து வருகின்றனர். கடந்த ஆண்டு தமிழக அரசு இவரை நேரில் அழைத்து பாராட்டியது குறிப்பிடத்தக்கது.
- ஸ்ரீதர்.