புதுமையான பாடத்திட்டம்: தமிழ்நாடு திறந்தநிலைப் பல்கலை வழங்கும் தமிழ் இலக்கியப் படிப்புகள்

புதுமையான பாடத்திட்டம்: தமிழ்நாடு திறந்தநிலைப் பல்கலை வழங்கும் தமிழ் இலக்கியப் படிப்புகள்
புதுமையான  பாடத்திட்டம்: தமிழ்நாடு திறந்தநிலைப் பல்கலை வழங்கும் தமிழ் இலக்கியப் படிப்புகள்
Published on

தமிழ்நாடு திறந்தநிலைப் பல்கலைக்கழகத்தின் தமிழியல் மற்றும் பண்பாட்டுப் புலம் சார்பில் நவீனப் பாடத்திட்டத்துடன் தமிழ் இலக்கியப் பட்டப்படிப்புகளுக்கான மாணவர் சேர்க்கை அறிவிப்பு வெளியாகியுள்ளது.  இங்கு பி.ஏ, பி.லிட் மற்றும் எம்.ஏ படிப்புகளில் சேர தகுதியும் விருப்பமும் கொண்ட மாணவர்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

படிப்பின் சிறப்பு

எம்.ஏ.(தமிழ்), பி.ஏ.(தமிழ்), பி.லிட். (தமிழ்) படிப்புகள் தொலைநிலைக்கல்வி வழியாக வழங்கப்படுகின்றன.  தமிழ்நாடு திறந்தநிலைப் பல்கலைக்கழகத் தமிழ்ப் பாடத்திட்டம்  தனித்தன்மையுடன் உயர்தரத்தில்  அமைந்துள்ளதாகக்  கல்வியாளர்கள் கருதுகிறார்கள்.  

தமிழ்நாடு திறந்தநிலைப் பல்கலைக்கழகம் வழங்கும் தொல்காப்பியப் பாடநூல்கள் முழுமையாகவும், எளிமையாகவும் உள்ளது சிறப்பு அம்சமாகும். நவீன இலக்கியப் போக்குகளை நுட்பமாகத் தெரிந்துகொள்ள 'இக்கால இலக்கியம்' என்ற பாடம் இடம்பெற்றுள்ளது. எழுத்து, சொல், பொருள் என்ற  மூன்று தொல்காப்பியப் பாடநூல்களும்  தலைசிறந்த வல்லுநர்களால் எழுதப்பட்டுள்ளன. 

கல்வித்தகுதி

பிளஸ் டூ படித்த மாணவர்கள் இளநிலைப் படிப்புகளுக்கு விண்ணப்பிக்கலாம். எம்ஏ படிப்பில் சேர விரும்புவோர் ஏதாவது ஒரு துறையில் இளநிலைப் படிப்பை முடித்திருக்கவேண்டும்.

சிறந்த பாடநூல்கள்

நேரடி முறையில் கல்லூரி மற்றும் பல்கலைக்கழகங்களில் பயிலும் மாணவர்கள் மற்றும் பேராசிரியர்கள் மத்தியிலும் பாடநூல்கள் வரவேற்பைப் பெற்றுள்ளன.  தமிழின் செம்மொழிக் களஞ்சியமான சங்க இலக்கியம் பற்றி  அறிந்துகொள்ள உதவியாக சங்க இலக்கியம் தொடர்பான பாடநூலை  வெளியிட்டுள்ளனர்.

இதுபோன்று  ஒப்பிலக்கியம் என்ற நூல்,  இந்திய மொழிகளின் இலக்கியங்களையும் உலக இலக்கியங்களையும் ஒப்பிட்டு அறிந்துகொள்ள துணைநிற்கிறது. இலக்கியத் திறனாய்வுக் கட்டுரைகள் எழுதுவதற்கும் படைப்பிலக்கியங்களான கவிதை, கதை, புதினம், எழுதப் பயிற்றுவிக்கும் நோக்கிலும் பாடநூல்களைத் தயாரித்துள்ளார்கள்.  

போட்டித்தேர்வுக்கு  உதவி

தமிழ்நாடு திறந்தநிலைப் பல்கலைக்கழகப் பாடநூல்களின் உதவியுடன் NET, SET தேர்வுகளில்  எளிதில் வெற்றிபெறமுடியும். மேலும் டிஎன்பிஎஸ்சி  மற்றும் ஐ.ஏ.எஸ், ஐ.பி.எஸ் போன்ற குடிமைப்பணித் தேர்வு எழுதுகிறவர்களுக்கும் இந்தப் படிப்புகளும், அதற்குரிய பாட நூல்களும் மிகவும் பயன்பட்டுவருகின்றன.

பி.ஏ., பி.லிட் படிப்புகள்

இன்றைய சூழலில் வேலைவாய்ப்பிற்கு உதவும் வகையில், மொழித்திறன் அதாவது பிழையின்றி எழுதும் சிறப்புப் பயிற்சி, ஆவணங்கள் தயாரித்தல், மேடைப்பேச்சு, கட்டுரை – திறனாய்வு எழுதுதல், ஊடகங்களுக்கு எழுதும் கலை உள்ளிட்ட பல்வேறு படைப்பு நுட்பங்கள்  பி.லிட் படிப்பில் கற்றுக்கொடுக்கப்படுகின்றன.

இது மட்டுமல்லாமல், தமிழ் கற்பிக்கும் நுட்பங்களும் கற்றுத்தரப்படுகின்றன. வானொலி, தொலைக்காட்சி, பத்திரிகை நிறுவனங்களில் பணியாற்ற உதவும் வகையில் விரிவும் நுட்பமும் கொண்ட பாடத்திட்டங்களைத் தனித்தன்மையுடன் உருவாக்கி மாணவர்களுக்கு வழங்கிவருகின்றனர்.

காணொலி வகுப்புகள்

தமிழக வரலாறும் பண்பாடும், இலக்கணம், மொழி வரலாறு, இலக்கிய வரலாறு திறனாய்வு, படைப்பிலக்கியம், நாட்டுப்புறவியல் போன்ற பாடங்களின் பாடநூல்களையும் சிறப்பாக  உருவாக்கியுள்ளனர். காணொலி வகுப்புகள், இணையவழிக் கலந்துரையாடல், நேரடி வகுப்புகள் என்று பல சிறப்பு அம்சங்களையும்  படிப்புக் காலத்தில் நடைமுறைப்படுத்தியுள்ளனர்.

இறுதித்தேர்வு எழுபது மதிப்பெண்களுக்கு மட்டும் எழுதினால் போதும். முப்பது  மதிப்பெண்களுக்கு வீட்டில் இருந்தே அசைன்மெண்ட் எழுதி அனுப்பலாம். ஒன்றிரண்டு பாடங்களில் தேர்ச்சிபெறாவிட்டால், உடனடியாக  மறுதேர்வு  எழுதும்  வாய்ப்பும்  மாணவர்களுக்கு  அளிக்கப்படுகிறது.

கட்டண விவரம்

இரண்டாண்டு எம்.ஏ. படிப்புக்கான கட்டணம் : Rs. 3,300  (ஆண்டிற்கு)

பி.ஏ., பி.லிட். படிப்புக்கான கட்டணம் (ஆண்டிற்கு) : Rs. 2,200

விண்ணப்பிக்கும் முறை

இணையவழியில் விண்ணப்பிக்கலாம். விண்ணப்பக்கட்டணம், விண்ணப்பிக்கும் முறை உள்ளிட்ட கூடுதல் விவரங்களுக்கு  044 24306663 / 24306664  என்ற தொலைபேசி எண்களைத் தொடர்புகொண்டு தெரிந்துகொள்ளலாம்.

விண்ணப்பிக்கக் கடைசி நாள் :  31.8.2020

விவரங்களுக்கு: www.tnou.ac.in

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com